
மகாராஷ்டிரத்தின் மும்பை விமான நிலையத்தில் தனது கடவுச்சீட்டின் பக்கங்களைக் கிழித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புணே மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் பாலேராவ் (வயது 51) என்ற நபர், கடந்த ஏப்.14 ஆம் தேதி மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி மஹாராஜ் பன்னாட்டு விமான நிலையம் வந்துள்ளார். அப்போது, அந்த விமான நிலைய அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை சோதனை செய்ததில் அதன் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2024-ம் ஆண்டு மட்டும் நான்கு முறை தாய்லாந்தின் கேளிக்கை நகரமான பாங்காக் நகரத்துக்கு சென்று வந்ததுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், அவர் பாங்காக் சென்றதை தனது குடும்பத்தினரிடமிருந்து மறைக்க கடவுச்சீட்டுகளின் பக்கங்களைக் கிழித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், விஜய் மும்பை விமான நிலையத்திலிருந்து இம்மாத (ஏப்ரல்) துவக்கத்தில் இந்தோனேஷியா சென்று வந்துள்ளார்.
இந்நிலையில், விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட அவர் சாஹர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவர் மீது இந்திய கடவுச்சீட்டு சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிக்க:இபிஎஸ் பெயருடன் வந்த மின்னஞ்சல் மூலம் கேரள அரசு அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!