
விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் நடைபெற்ற பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளுக்கு எந்த கருத்தும் தெரிவிக்காமல், அன்புமணி பெயரை ஒரு இடத்திலும் சொல்லாமல் தனது பேச்சை முடித்தார் ராமதாஸ்.
பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், கட்சியின் நிறுவனா் மற்றும் தலைவா் மருத்துவா் ச.ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில்,
காசு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டமல்ல
இதுவல்லவோ கூட்டம்; இதுவல்லவோ பொதுக்குழு என்ற அளவுக்கு கூட்டம் கூடியுள்ளது. வரலாற்றுச் சிறப்பிக்க இந்த கூட்டம், காடு கொடுத்து கூட்டப்பட்ட கூட்டமல்ல. கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாமே தொண்டர்கள்தான்.
நல்ல கூட்டணி அமையும்
2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான முழு அதிகாரமும் எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் மனதில் இருப்பதை நான் அறிவேன். எனவே தொண்டர்கள் எதிர்பார்க்கும் நல்ல கூட்டணி அமையும். இயற்கையான கூட்டணி; வெற்றிக் கூட்டணி என்றார்.
பாராட்டுக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும்
10.5 சதவீத இட ஒதுக்கீடு, 20 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தற்கு, அதில் பயன்பெற்றவர்கள் என்னிடம் வந்து நன்றி சொல்லியிருக்க வேண்டும்; பாராட்டுக் கூட்டம் நடத்தியிருக்க வேண்டும். ஆனால், எல்லோரும் சேர்ந்து உச்ச நீதிமன்றம் சென்றுவிட்டார்கள். இருந்தாலும் அவர்களுக்கும் சேர்ந்தே நாங்கள் போராடுவோம்.
ஒரே வாரத்தில் இட ஒதுக்கீட்டை வழங்க முடியும்
மத்திய அரசுதான் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூறிவிட்டு தமிழக அரசு தட்டிக் கழிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும்வரை போராடாமல் விடப்போவதில்லை. முதல்வர் நினைத்தால் இருக்கின்ற தரவுகளை வைத்து ஒரே வாரத்தில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை உடனே வழங்க முடியும் என்றார்.
அன்புமணி பெயரை சொல்லதா ராமதாஸ்
கட்சியின் விதிகளை மீறி செயல்பட்ட அன்புமணி மீது நடவடிக்கை வேண்டி, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் 16 பரிந்துரைகளை ஜி.கே. மணி வாசித்து, ராமதாஸிடம் வழங்கிய நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல், அன்புமணியின் பெயரைக்கூட ஒரு இடத்திலும் செல்லாமல், தனது பேச்சை முடித்தார் ராமதாஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.