

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க்கிற்கு மிகப்பெரிய அடியாக, அவருக்கு சொந்தமான எக்ஸ் சமூக வலைதள நிறுவனமான 'எக்ஸ்' நிறுவனத்துக்கு ரூ.1,259 கோடி அபராதம் விதித்து ஐரோப்பிய தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு 'ட்விட்டர்' சமூக வலைதள நிறுவனத்தை வாங்கி அதற்கு 'எக்ஸ்' என பெயர் மாற்றம் செய்து பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வந்தார் எலான் மஸ்க்.
இதனிடையே, சமூக வலைதளங்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு நிறுவனங்களுக்கான புதிய சட்ட விதிமுறைகளை அறிமுகம் செய்தது ஐரோப்பிய தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம், அதில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமென உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எக்ஸ் வலைதளம் இணங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனிடையே, எக்ஸ் வலைதளத்தில் பயனர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக பிரேசில், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 27 நாடுகளின் கூட்டமைப்பின் டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து ஆணையம் தனது முடிவை வெளியிட்டுள்ளது.
அதில், டிஎஸ்ஏ எனப்படும் டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாக 'எக்ஸ்' நிறுவனத்துக்கு 120 மில்லியன் யூரோ(ரூ.1,259 கோடி) அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிடும் தகவல்களுக்கு பணம் செலுத்தினால் தான் நீல நிற டிக் கிடைக்கும் என பயனர்களை ஏமாற்றியதாகவும், டிஜிட்டல் சேவைகள் சட்ட விதிகளை மீறியதாகவும், விளம்பர தரவுகளில் போதிய வெளிப்படைத்தன்மை இல்லை மற்றும் பொது தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அணுகுவதற்கு "தேவையற்ற தடைகளை" ஏற்படுத்துவது போன்ற காரணங்களால் 'எக்ஸ்' நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.