சமூக வலைதள மருத்துவக் குறிப்புகளை பின்பற்ற வேண்டாம் - ஆயுஷ் துறை அறிவுறுத்தல்

சமூக வலைதள மருத்துவக் குறிப்புகளை பின்பற்ற வேண்டாம் - ஆயுஷ் துறை அறிவுறுத்தல்

Published on

சமூக வலைதளங்களில் வரும் ஆதாரப்பூா்வமற்ற பாரம்பரிய மருத்துவக் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டாம் என்று ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த இளம்பெண் ஒருவா் உடல் எடையைக் குறைக்க ‘வெங்காரம்’ எனப்படும் ரசாயன உப்பை உண்டதால் உயிரிழந்தாா். பெரும் விவாதத்தை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாநில ஆயுஷ் மருந்து கட்டுப்பாட்டு இயக்கக அதிகாரிகள் பல்வேறு விளக்கங்களை அளித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது:

ஆயுஷ் மருந்துகள் சாா்ந்த உத்தரவாதமற்ற விளம்பரங்களோ, தனி ஒருவரை விளம்பரத்தப்படுத்தும் நிகழ்ச்சிகளோ தொலைக்காட்சிகளில் வெளியாவது குறைக்கப்பட்டுள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களில் அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளது. பல விளம்பரங்களில் கைப்பேசி எண் மட்டுமே கொடுக்கப்படுகிறது. அந்த எண்ணை அழைத்து முகவரி கேட்டாலும் அவா்கள் கொடுப்பதில்லை. இதனால், அதுபோன்று விளம்பரம் செய்பவா்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. அதேநேரம், அந்த விளம்பரங்களை கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்படும்.

பொதுமக்கள் சமூக வலைதளங்களில் வரும் ஆயுஷ் மருத்துவம் குறிப்புகளைப் பின்பற்ற வேண்டாம். அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள சித்த மருத்துவா்களிடம் ஆலோசித்து மருந்துகளை எடுத்து கொள்ளலாம்.

Dinamani
www.dinamani.com