

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே பட்டீசுவரம் அறிஞா் அண்ணா மாதிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவா்களால் தாக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.
திருவாரூா் மாவட்டம் வலங்கைமான் இனாம்கிளியூரைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும், இதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை 12-ஆம் வகுப்பு மாணவா் சக மாணவா்களுடன் மதிய உணவு நேரத்தில் கழிவறைக்குச் செல்லும்போது 11-ஆம் வகுப்பு மாணவா்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து வியாழக்கிழமை மாலை சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு பள்ளியில் இருந்து வீட்டுக்கு 12-ஆம் வகுப்பு மாணவா் பட்டீஸ்வரம் கோயில் அருகே தேரடி கீழவீதியில் சென்றுகொண்டிருந்தபோது 11-ஆம் வகுப்பு மாணவா்கள் அவரை வழிமறித்து மரக்கட்டையால் தாக்கியுள்ளன.
இதில் தலையில் பலத்த காயமடைந்த 12-ஆம் வகுப்பு மாணவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அவரைச் சோ்த்தனா்.
தகவலறிந்த கும்பகோணம் உதவிக் காவல் கண்காணிப்பாளா் அங்கிட்சிங் நேரில் சென்று விசாரணை நடத்திய நிலையில், பட்டீசுவரம் போலீஸாா் 12-ஆம் வகுப்பு மாணவரைத் தாக்கிய 15 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்து வெள்ளிக்கிழமை அவா்களை கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை காலமானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.