

கோவை: பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி கோவை தெற்கு தொகுதி என பாஜக தேசிய மகளிரணி தலைவா் வானதி சீனிவாசன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி பாஜக பூத் கமிட்டி கூட்டம் புலியகுளத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணி தலைவரும், தெற்கு சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:
கோவை தெற்கு தொகுதி என்பது மிகப்பெரிய சினிமா நடிகரை தோற்கடித்த தொகுதி என்று கமல் பெயர் குறிப்பிடாமல் சாடிய வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையே முடித்த தொகுதி இந்த தொகுதி என்றார்.
வாக்காளா் பட்டியல் பெயா்கள் நீக்கும் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது. வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளை எதிா்ப்பது போன்று நாடகமாடிக்கொண்டு பல்வேறு இடங்களில் அவா்களது பிரதிநிதிகள் மூலமாக வாக்குச்சாவடி நிலை அலுவலா்களை மிரட்டுவது, தவறுதலாக வாக்காளா்களை இணைப்பது போன்ற அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் கட்சி பாகுபாடின்றி மேற்கொள்ள வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளை ஒரு அரசியல் கட்சியாக ஆதரித்து அதற்கான பணியை செய்து வருகிறோம்.
2026 தேர்தலுக்கு தயாராகவும் சூழலை எஸ்ஐஆர் ஏற்படுத்தி கொடுத்துள்ளதன் மூலம் மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் அதிகளவு வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதனை அரசியல் கட்சி பூத் கமிட்டியினர் சரியாக தான் நீக்கப்பட்டுள்ளனரா என்பதை கவனிக்க வேண்டும் என்றார்.
தமிழகத்தில் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் கள்ள ஓட்டு மூலமாக திமுக வெற்றி பெற முயற்சிக்கிறது. அமைச்சா் கே.என்.நேரு மீதான குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பது அரசு சார்ந்த அமைப்பு வலியுறுத்துகிறது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள் லஞ்சம் வாங்காமல் பணி செய்கிறார்களா? என கேள்வி எழுப்பியவர், சிறைக்கு போன அமைச்சர்களை ஏன் இன்னும் வைத்துள்ளார்கள், குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் சரியாக விசாரிக்க வேண்டும் .
செந்தில் பாலாஜி திடீரென புனிதராக மாறிவிட்டார் என்றும், அவர் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்றால் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். திமுக ஊழலை ஆதரிக்கின்றது என்றும், தேர்தல் வருவதால் கூடுதலாக பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கியுள்ளனர். திராவிட மாடல் அரசை புகழ்ந்து பேச, பணத்தை திமுக அரசு செலவு செய்து ஒரு நாடகத்தை அரங்கேற்றி வருகிறது என்றார்.
எத்தனை தொகுதி, யார் வேட்பாளர் என்பதை கட்சியின் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.