

இந்த ஆண்டு மூன்று வடிவிலான போட்டிகளிலும் (டெஸ்ட், ஒருநாள், டி20) இந்திய அணி சந்தித்துள்ள ஏற்ற, இறக்கங்களை விரிவாக பார்க்கலாம்.
இந்திய கிரிக்கெட்டுக்கு இந்த ஆண்டு ஒரு கலவையான ஆண்டாக அமைந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். ஒருபுறம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பை சாம்பியன் என ஏறுமுகமாக இருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்த ஆண்டு இந்திய அணிக்கு சிறப்பானதாக அமையவில்லை. சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களை இந்திய அணி முழுமையாக இழந்தது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
டெஸ்ட்
கடந்த ஆண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே, இந்திய அணி இந்த தொடரை எளிதில் 3-0 என வென்றுவிடும் என்ற எண்ணம் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் உள்பட பலரிடமும் காண முடிந்தது. ஆனால், டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி 3-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி, 12 ஆண்டுகளாக சொந்த மண்ணில் தொடர்ந்த இந்திய அணியின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது. அதுமட்டுமின்றி, இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்த முதல் அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் நியூசிலாந்து அணி படைத்தது.
நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரையும் இந்திய அணி இழந்தது. 5 போட்டிகள் கொண்ட அந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரின் ஃபார்ம் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்த இந்திய அணி, அடுத்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்து செல்லத் தயாரானது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சிறப்பாக செயல்படுவார்களா என்ற விமர்சனங்கள் பெரிதாகும் முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அனைவருக்கும் அவர்கள் இருவரும் அதிர்ச்சியளித்தனர்.
தொடர்ச்சியாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் தோல்வி, மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஓய்வு இதுபோன்ற இக்கட்டான சூழல்களுக்கு நடுவே டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக்கப்பட்டார் ஷுப்மன் கில்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவற்கு முன்பாகவே ஷுப்மன் கில்லின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன. மூத்த வீரர்கள் இல்லாமல் அவர் என்ன செய்யப்போகிறார், இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்து மிகவும் கடினம் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் சாதித்துக் காட்டியது ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. சில இடங்களில் கவனமாக செயல்பட்டு விளையாடியிருந்தால், தொடரைக் கைப்பற்றும் வாய்ப்பும் இருந்தது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்ததற்கு பிறகு, இந்திய அணி சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி சரிவை சந்தித்தாலும், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரை 2-0 என முழுமையாகக் கைப்பற்றியது சொந்த மண்ணில் இந்திய அணியின் ஆதிக்கம் குறையவில்லை என்ற பிம்பத்தை சற்று ஏற்படுத்தியது. ஆனால், உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்க அணி அந்த பிம்பத்தை அடித்து நொறுக்கியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக இழந்தது. இதனால், டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் இந்திய அணியின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதா என்ற கேள்வி முன்னாள் வீரர்கள் உள்பட பலரது மனதிலும் ஆழமாக எழத் தொடங்கியது.
12 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், ஓராண்டு இடைவெளியில் சொந்த மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களை முழுமையாக இழந்திருப்பது ரசிகர்களை மட்டுமின்றி, முன்னாள் இந்திய வீரர்கள் பலருக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் டிராவிலும் முடிந்துள்ளது.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மீண்டும் வலுவான அணியாக திகழ வேண்டும் என்பதே ரசிகர்களின் நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஒருநாள்
இந்திய அணி நீண்ட காலமாக ஒருநாள் வடிவிலான போட்டிகளில் மிகச் சிறந்த அணியாக வலம் வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த பேட்டர்களாக இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் உள்ளனர்.
இந்த ஆண்டு இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது. அதன் பின், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியைக் கைப்பற்றி அசத்தியது.
கடந்த மார்ச் மாதத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி நடைபெற்றது. அதன் பின், ஐபிஎல் தொடர், இங்கிலாந்து சுற்றுப்பயணம் மற்றும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் காரணமாக இந்திய அணி அதிக அளவிலான ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இதற்கிடையில், ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவிடமிருந்து ஷுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது. 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை மனதில் வைத்தே ஷுப்மன் கில்லுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்ட பிறகு, 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பைத் தொடரில் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்களா என்ற கேள்வி அதிகரித்தது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடமும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் விளையாடுவார்களா எனத் தொடர்ச்சியாக கேள்விகள் கேட்கப்பட்டன. 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கு இன்னும் நிறைய நேரமிருக்கிறது எனவும், முழு உடல்தகுதி மற்றும் நன்றாக விளையாடும் பட்சத்தில் அவர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பிருக்கிறது எனவும் கம்பீர் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட முதல் தொடரிலேயே ஷுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி தொடரை இழந்தது. தொடரை இழந்தபோதிலும், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் ஆட்டம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்று, ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் விளையாடுவதே அவர்களின் மகிழ்ச்சிக்கான காரணம்.
2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெறுவார்களா என்ற வழக்கமான கேள்விகளுக்கு மத்தியிலேயே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்கினர்.
இந்த தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். குறிப்பாக, தொடர்ச்சியாக இரண்டு சதங்கள் விளாசி அசத்தினார் விராட் கோலி. அவருடைய அதிரடியான ஆட்டம் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி இடம்பெறுவாரா என்று எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக இருந்தது என்றே கூறலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அந்த தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது. தனது சிறப்பான ஆட்டத்தால் தொடர் நாயகன் விருதினையும் வென்று அசத்தினார் விராட் கோலி.
ஒருநாள் வடிவிலான போட்டிகளை பொருத்தவரையில் இந்திய அணிக்கு இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்தது என்றே கூறலாம். ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை ஆடுகளத்தில் பார்ப்பதற்கெனவே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்று ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பிரியாவிடை அளிப்பதே இந்திய கிரிக்கெட்டுக்காக அவர்கள் அளித்த பங்களிப்புக்கு கிடைக்கும் மிகப் பெரிய கௌரவமாக இருக்கும். இந்திய அணித் தேர்வுக் குழு என்ன நினைக்கிறது என்பதைப் பொருத்தும், சம்பந்தப்பட்ட வீரர்களின் உடல் தகுதியைப் பொருத்துமே உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் விளையாடுவார்கள் என நம்புவோம்.
டி20
கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் முறையாக டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதையடுத்து, டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் முழு நேரக் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டதிலிருந்து இந்திய அணி டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இளம் வீரர்கள் பலரும் அதிரடியில் மிரட்டத் தொடங்கினர். உலகின் சிறந்த டி20 அணியாக இந்தியா உருவெடுத்தது.
டி20 வடிவிலான போட்டிகளைப் பொருத்தவரை இந்த ஆண்டு இந்திய அணியின் ஆண்டு என்றே கூறலாம். திரும்பும் திசையெங்கும் வெற்றி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 எனக் கைப்பற்றியதிலிருந்து இந்த ஆண்டின் வெற்றிப் பயணம் தொடங்கியது.
கடந்த செப்டம்பரில் டி20 வடிவில் நடத்தப்பட்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில்கூட தோல்வியடையாமல் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பிறகு இந்திய அணிக்கு இரண்டு சவால்கள் காத்திருந்தன. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் சொந்த மண்ணில் டி20 தொடர் மற்றும் இந்தியாவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்.
வலிமையான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர்களது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடியது. மிகவும் சவால் நிறைந்த இந்த தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று அசத்தியது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அண்மையில் நிறைவடைந்த டி20 தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் குறையவில்லை. 5 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவின் மோசமான ஃபார்ம் கவலையளிப்பதாக இருந்தாலும், அவரது ஃபார்ம் இந்திய அணியின் வெற்றியை பாதிக்காததாலும் கேப்டன் பொறுப்பில் இருப்பதாலும் அவர் தப்பித்துக் கொண்டிருக்கிறார் என்றே கூறலாம்.
2026 ஆம் ஆண்டுக்கான இந்திய அணியின் திட்டம் என்ன?
இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட்டின் செயல்பாட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். ஒருபுறம், வெள்ளைப் பந்து போட்டிகளில் (ஒருநாள், டி20) வலுவான அணியாக இந்தியா உள்ளது. மறுபுறம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக வரலாற்றுத் தோல்விகளை சந்தித்தது ரசிகர்களை மட்டுமின்றி முன்னாள் வீரர்கள் பலரையும் கவலையடையச் செய்துள்ளது. அதிலும் குறிப்பாக, சொந்த மண்ணில் இந்திய அணி வரலாற்றுத் தோல்விகளை சந்திப்பதை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி மீண்டும் வலுவான அணியாக மாற வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பாக உள்ளது.
அடுத்த ஆண்டு இந்திய அணியின் கண்முன்னே உள்ள மிகப் பெரிய சவால் ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரே. மிகப் பெரிய சவால் எனக் கூறுவதற்கான காரணம் என்னவென்றால், உலகக் கோப்பை டி20 தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. சொந்த மண்ணில் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி உள்ளது. தற்போதுள்ள இந்திய அணி டி20 உலகக் கோப்பைக்கான கடுமையான போட்டியாளர், ஏன் கோப்பையை வெல்வதற்கான அனைத்து கட்டங்களையும் டிக் செய்துள்ளது என்று கூறினாலும் மிகையாகாது.
ஒருநாள் மற்றும் டி20 வடிவிலான போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடுகள் கவலையளிக்கும் விதமாக இல்லை. ஆனால், டெஸ்ட் வடிவிலான போட்டிகளில் இந்திய அணியின் நிலை மேலும் மோசமாகிவிடக் கூடாது. அடுத்த ஆண்டு இலங்கை மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணி டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த இரண்டு தொடர்களும் இந்திய அணிக்கு எளிதாக இருக்கப் போவதில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற இந்த தொடர்களை வெல்ல வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு அதிகம் இருக்கிறது. பாதை கடினமானது என்றாலும் அதில் பயணித்து டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
2026 ஆம் ஆண்டு இந்திய அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) சிறந்த ஆண்டாக அமையும் என நம்பலாம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.