

விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 2.16 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரகத்தின் புதிய கட்டடத்தை வெள்ளிக்கிழமை காலை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து நடைபெற்ற அரசு விழாவில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். இதையடுத்து நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.
திறந்து வைக்கப்பட்டபணிகள்: கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் கட்டப்பட்ட கலைஞரின் கனவு இல்லத் திட்ட வீடுகள், முதல்வரின் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீடுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், இலங்கைத் தமிழர்களுக்கான மறுவாழ்வு முகாம்களில்புதிய வீடுகள், நியாயவிலைக் கடைகள் முதலான ரூ.100.80 கோடியில் கட்டப்பட்டுள்ள 2025 திட்டப்பணிகள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் ரூ.81.59 கோடியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.7.19 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார பொதுசுகாதார ஆய்வகக் கட்டடங்கள், கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 6.62 கோடியில் அமைக்கப்பட்ட குடிநீர்த் திட்டப்பணிகள், வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ரூ.3 கோடியில் கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் ரூ.1.95 கோடியில் கட்டப்பட்ட விதை சேமிப்புக் கிடங்கு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சங்கராபுரம் பேரூராட்சியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட புதிய பேரூராட்சிக் கட்டடம் ஆகியவற்றை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டிய பணிகள்: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, தாட்கோ உள்ளிட்ட பல்துறைகளுக்கான 62 திட்டப்பணிகளுக்கு ரூ.366.48 கோடி மதிப்பீட்டில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து பல்துறைகளின் சார்பில் 2,16,056 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி. கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, டி.ஆர்.பி. ராஜா, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் க.கார்த்திகேயன், தா. உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், கள்ளக்குறிச்சி எம்.பி. தே. மலையரசன், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.