

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், வீரசோழபுரத்தில் 8 தளங்களுடன் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியரகத்தின் புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் கள்ளக்குறிச்சி பகுதிகள் இயங்கி வந்த நிலையில், 2019 ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி புதிய மாவட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து 2019, நவம்பர் 26-ஆம் தேதி நடைபெற்ற விழாவில் தமிழகத்தின் 34 ஆவது மாவட்டமாக விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி உருவானது.
இந்த மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 2 வருவாய்க் கோட்டங்கள், 9 வருவாய் வட்டாட்சியரகங்கள், 562 வருவாய்க் கிராமங்களைக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 412 கிராம ஊராட்சிகள் உள்ளன.
கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, கல்வராயன்மலை, திருநாவலூர், சங்கராபுரம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட9 ஒன்றியங்களும் அமைந்துள்ளன.
விவசாயப்பகுதிகள் அதிகம் நிறைந்த இந்த மாவட்டத்தில் சிறப்புவாய்ந்த கல்வராயன்மலை, திருக்கோவிலூரில் உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டானேசுவரர் திருக்கோயில், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோயில், சங்கராபுரம் வட்டத்தில் ஆதிதிருவரங்கம் கோயில், ரிஷிவந்தியம் அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் போன்ற கோயில்களும் அமைந்துள்ன.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கட்டடம் நகருக்குள் இயங்கி வந்தது. அரசுத் துறைகளின் அலுவலகங்கள் பல வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்தன.
இந்த நிலையில், அனைத்துத் துறை அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்கும் வகையில், வீரசோழபுரம் பகுதியில் 13.66 ஏக்கர் பரப்பளவில் 8 தளங்களுடன் கொண்ட புதிய மாவட்ட ஆட்சியரகக் கட்டடம் ரூ. 139.41கோடியில் கட்டி முடிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டக் கருவூலம், வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் அலுவலகம், மக்கள் குறைதீர் கூட்டரங்கம், வங்கி, அஞ்சல் அலுவலகங்கள், காணொலிக் காட்சிக் கூட்டரங்கம் போன்ற பல்வேறு அலுவலகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து, புதிய மாவட்டஆட்சியரகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிச. 26) திறந்து வைத்து பார்வையிட்டார்.
நிகழ்வில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், தா. உதயசூரியன், ஏ.ஜெ.மணிக்கண்ணன், கள்ளக்குறிச்சி எம்.பி. தே. மலையரசன், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.