

எனக்கு வயதாகிவிட்டது. இதுதான் எனது கடைசி யுத்தமாகக்கூட இருக்கலாம். ஆனால், எனது உடம்பில் கடைசி மூச்சி இருக்கும் வரை உங்களுக்காகப் போராடுவேன் என தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், தந்தைக்கே துரோகம் செய்பவர், இயக்கத்தையும் மக்களையும் காப்பாற்றுவாரா? என்று உருக்கமாக சமூக வலைதளத்தில் விடியோ வெளியிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட விடியோவில் கூறியிருப்பதாவது:
என் உயிரைவிட மேலான பாமக சொந்தங்களே, என் மக்களே, இன்றைக்கு உங்ககிட்ட பேசப்போறேன். ஆனால் பேசப்போற எனக்கு தொண்டை அடைக்கிறது. ஆனா பேசியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் என நா தழுதழுக்க கண்ணீர் மல்க பேசினார்.
இப்ப வெளியிலே நடக்கிற சண்டையை, தயவுசெய்து ஒரு குடும்ப சண்டையா பார்க்காதீங்க. இது இகே பிரச்னையல்ல, இது கோபமல்ல, இது நான் பெற்றெடுத்த ஒரு இயக்கத்தோட ஆன்மாவை காப்பாற்றுகிற போர்!
கடந்த சில வாரங்களாக, அன்புமணி கும்பல்ல இருக்கிற சிலர் என்னைப்பற்றி என்னென்னவோ சொல்றாங்க. எனக்கு வயதாகிவிட்டது, புத்தி பேதலித்து விட்டது, சுயநினைவு இல்லாமல் பேசுகிறார் என்றெல்லாம் அசிங்கப்படுத்துகிறார்கள். அவங்க என்னை என்ன வேணுமானாலும் சொல்லட்டும், பழிச்சுமத்தட்டும். அதை தாங்கிக்கொள்ளும் சக்தி எனக்கு இருக்கிறது. ஆனால், என் உழைப்பில் உருவான இந்தக் கட்சியை தயவு செய்து காயப்படுத்தாதீங்க. இந்தக் கட்சி எனக்கு யாரும் கொடுத்த சீதனம் அல்ல. பரம்பரையா வந்த சொத்தும் அல்ல. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் என் ரத்தத்தை வியர்வையா சிந்தி நான் கட்டின மக்கள் கோட்டை. இதற்காக நான் தியாகம் செய்திருக்கிறேன். வெறும் பதிவிக்காகவா..? இல்ல, என் மக்களுக்காக.
ஆனால், இன்றைக்கு என் கண் முன்னாடி பலவீனமா நிற்கிறப்போ, பெற்ற வயிறு பத்தி எரிகிறது. உண்மைதான். நான் என் மகன் அன்புமணியை நம்பினேன். அது நான் செய்த மிகப்பெரிய தவறு. சேர்ந்து நின்று இந்த இயக்கத்தை காப்பாற்றுவோம் என நினைத்தேன். அவரை ஒரு நல்ல தலைவனாகச் செதுக்கலாம் எனப் பார்த்தேன். ஆனால், இன்றைக்கு ஒரு கசப்பான உண்மை புரிகிறது. சிலைகளைத்தான் செதுக்க முடியுமே தவிர, சில பேரை செதுக்கவே முடியாது, மாற்றவே முடியாது. தலைமை என்பது அப்பன் வீட்டு சொத்துமாதிரி வாரிசா வருவது இல்லப்பா. அது உழைப்பால், தியாகத்தால் வரனும்.
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, அன்புமணிக்கு நான் கொடுக்கவில்லை... எம்.பி. பதவி, மத்திய அமைச்சர் பதவி, தேர்தலில் தோற்ற பிறகும் ராஜ்யசபா எம்.பி. என எல்லாமே கொடுத்தோம். ஆனால், பொறுப்பு வந்தா மட்டும் போதாது, பொறுப்புணர்ச்சியும் வேணும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என சொல்வது மாதிரி, அன்புமணி தன்னோட பொறுப்பை சரியா செயல்படுத்தவில்லை என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். அவர் நாடாளுமன்றத்துக்கு சென்ற வருகைப் பதிவை பாருங்கள். தேசிய சராசரி வருகைப் பதிவேட்டில் மற்ற எம்.பி.க்கள் வருகை 79 சதவீதமாக இருக்கிறபோது, அன்புமணி வருகை வெறும் 30 சதவீதம் தான். அதாவது பாதிக்கூட இல்லை. அதேபோல விவாதங்கள் நடைபெறும்போது சராசரியாக 79 விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார். ஆனால் அன்புமணி 7 விவாதங்களில்தான் பங்கேற்றிருக்கிறார். எனக்கு இதையெல்லாம் பார்க்கிறபோது மனது வலிக்கிறது. அவமானமாக இருக்கிறது. ஒருவரை நம்பி நாம் பொறுப்பு கொடுத்தால் மக்களுக்காக உழைக்கனும். ஆனால் அவர் வீட்டில் உட்கார்ந்து எப்படி எம்.பி. பதவியை வீண் செய்தாரோ, அதேமாதிரி கட்சியிலேயும் ஆயிரம் உதாரணம் இருக்கு. ஒழுங்கா களப்பணி செய்யவில்லை, தொண்டர்களைச் சந்திக்கவில்லை. இதுதான் உழைப்பா?, இல்லை இதுதான் மிதப்பா?
ஒரு காலத்தில் பாமகவுக்கு 20 எம்எல்ஏ-க்கள் இருந்தனர். இன்றைக்கு கட்சி அங்கீகாரத்தை இழந்து நிற்கிறது. ஏன் தெரியுமா?. உழைக்க வேண்டிய இடத்தில உரிமைக் கொண்டாடிவிட்டு இருந்தோம். என்னை ஏமாற்றியவர்களை நான் மன்னிப்பேன். ஆனால், என்னை நம்பி வந்த லட்சக்கணக்கான தொண்டர்களை ஏமாற்ற விடமாட்டேன். எனக்கு இந்த வயதில் பதவியோ, அதிகாரமோ தேவையில்லை. நான் கட்டிய இந்த வீட்டை உங்களுக்காக காப்பற்றவே நான் இப்போ முன்னாடி வந்து நிற்கிறேன். இந்தக் கட்சியை காப்பாற்ற சில உறவுகளை இழக்கனுமா?, ஏற்கனவே அதையெல்லாம் நான் தள்ளிவிட்டு வந்திருக்கிறேன். சட்டப்படியும் யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு தலைமைப் பதவியே நீதிமன்றத்தில் நிற்கிறது. அஸ்திவாரத்திலேயே சந்தேகம் வந்தால் அந்தக் கட்டடம் எப்படி நிற்கும். அதுபோலத்தான் செல்கிறேன். டிசம்பர் 29-ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகின்ற பொதுக்குழு சாதாரண கூட்டம் அல்ல. அது உண்மையான பாமகவின் மறுபிறப்பு.
வரும் தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்று, நமது கட்சியின் சின்னம், இழந்த அங்கீகாரத்தை மீட்க வேண்டும். இந்தக் கட்சியை மறுபடியும் மக்களுக்கான கட்சியாக மாற்றுவதற்கான போராட்டம் இது. அன்புமணி பக்கம் இருக்கிற என் தொண்டர்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கிறேன். தந்திரங்களுக்கு ஏமாந்துவிடாதீர்கள். ஒரே ஒரு கேள்வி உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். பெற்ற தந்தைக்கே துரோகம் செய்பவர், நாளைக்கு இந்த இயக்கத்தையோ, மக்களையோ காப்பாற்றுவாரா?. எனக்கு வயதாகிவிட்டது. இதுதான் எனது கடைசி யுத்தமாகக்கூட இருக்கலாம். ஆனால், எனது உடம்பில் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுக்காகப் போராடுவேன். கோபத்தில் அல்ல, அறத்தோடு, அன்போட நிற்பேன். ஊர் ஊரா ஓடி உழைத்த என் தம்பிகள், என் பிள்ளைகள் எல்லோரும் சேலத்துக்கு வரனும். ஒருத்தர்கூட விடுபடக்கூடாது. நாம் எல்லோரும் கைகோத்தால் இந்த ஆலமரம் நிமிர்ந்து நிற்கும். மக்களுக்கான பாமகவை மீண்டும் உருவாக்குவோம்.
நீங்க நல்லா யோசிங்க. உங்க மனசாட்சிக்கிட்ட ஒரு முறை பேசுங்க. நம்ம கட்சி ஒரு காலத்துல எப்படி இருந்த கட்சி. இன்றைக்கு அங்கீகாரமே இல்ல. நீங்கள் சிந்தித்து பார்த்தால் இதற்கு பின்னால் இருக்கிற உண்மை உங்களுக்குப் புரியும். இது நம்முடைய இயக்கத்தை காப்பாற்ற வேண்டியதற்கான கடைசி வாய்ப்பு. இந்த வாய்ப்பை நீங்கள் சரியா பயன்படுத்துவீங்க என நம்புகிறேன். இந்தக் கட்சியோட நிறுவனரா மட்டுமல்ல, உங்கள் ஐயா நான் பேசுகிறேன். உங்களுக்காக நான் சேலத்துக்கு வருகிறேன். நான் நம்பிய சிலர் என்னை ஏமாற்றினாலும், என் மக்கள் எனக்காக வருவீர்கள், என்னுடன் நிற்பார்கள் என்று நம்புகிறேன். அன்பும் உழைப்பும் என்றைக்கும் வெல்லும். நாடகமும் சோம்பேறித்தனமும் கண்டிப்பா தோற்கும். சேலத்தில் நாம் சந்திப்போம். உங்கள் ஐயா நான் கூப்புடுகிறேன் கட்டாயம் வந்துவிடுங்கள் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.