

பெய்ஜிங்: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படவிருந்த மோதலை நிறுத்தியதில் தனது நிர்வாகம் முக்கிய பங்குவகித்ததாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட ராணுவ மோதல்களைத் தொடர்ந்து, பதட்டங்களைத் தணிக்க தாங்கள் சமரசம் செய்ததாக திடீரென சீனா உரிமை கோரியுள்ளது. இதனை இந்திய அதிகாரிகள் விசித்திரமானது மற்றும் தவறானது என கூறி நிராகரித்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினர் முன்னிலையிலேயே கொல்லப்பட்டனர்.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழு பொறுப்பேற்பதாக அறிவித்தது. மேலும், இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது அந்த குழுவின் தலைவர் ஷேக் சஜ்ஜாத் குல் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அறிவித்தது.
இதையடுத்து இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்துர்' மூலம் நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை 25 நிமிடங்கள் இந்திய ராணுவமும், விமானப் படையும் இணைந்து நடத்திய அதிதுல்லிய தாக்குதலை நடத்தியது. இதில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இயங்கிவந்த ஜெய்ஷ்-ஏ-முகமது, லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 9 முக்கிய முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில் பாகிஸ்தான் மக்கள் அல்லது ராணுவ முகாம்களை குறிவைக்கவில்லை. மக்களின் உள்கட்டமைப்புகளுக்கு சேதம் விளைவிப்பதை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இந்த நடவடிக்கை மூலம் பாகிஸ்தானைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்ட நிலையில், பதிலடியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை வருந்தத்தக்கதாகவும், தற்போதைய நிலைமை குறித்து நாங்கள் கவலை கொண்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது
போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் எந்நேரமும் அணு ஆயுதப் போராக மாறக்கூடும் என்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையே போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையை மே 10, சனிக்கிழமை அமெரிக்கா தொடங்கியது.
பிரதமர் மோடி மற்றும் உயர் அதிகாரிகளுடன் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸும், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் அதிகாரிகளுடன் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் நீண்ட ஆலோசனைகள் நடத்தினர்.
பின்னர், இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேசிக்கொண்ட நிலையில், இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல்முறையாக மே 10, மாலை 5 மணியளவில் சமூக வலைதளம் மூலம் அறிவித்தார்.
தொடர்ந்து, இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாரும் போர் நிறுத்தத்தை உறுதி செய்தனர். பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர், இந்திய தரப்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதைத் தொடர்ந்து உடன்பாடு எட்டப்பட்டதாக விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இந்தியா - பாகிஸ்தான் மோதல் நீடித்தால் இரு நாடுகளுடனும் வர்த்தகம் மேற்கொள்ளப்படாது எனத் தெரிவித்து, போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கொண்டதால் போர் நிறுத்தம்
எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் தொடர்புகொண்டு போரை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டதால் மட்டுமே நிறுத்தியதாக விளக்கம் அளித்தது.
இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான்
பாகிஸ்தான் ராணுவம் கேட்டுக் கொண்டதால் மட்டுமே போரை நிறுத்தியதாக இந்தியா அறிவித்த பிறகும், தொடர்ந்து 60 முறைக்கு மேல் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியது நான்தான், வர்த்தகத்தை முன்வைத்துதான் போர் நிறுத்தப்பட்டதாக பல்வேறு தருணங்களில், பல்வேறு நாடுகளின் தலைவர்களின் சந்திப்பின்போது டிரம்ப் தெரிவித்து வருகிறார்.
இந்தியா-பாகிஸ்தான் போரை நாங்கள்தான் நிறுத்தினோம்
இந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படவிருந்த ராணுவ மோதல்களை சமரசம் செய்து நிறுத்தியதாக சீனா இப்போது உரிமை கோரியுள்ளது.
சர்வதேச நிலவரம் மற்றும் சீனாவின் வெளியுறவுக் கொள்கை குறித்த கருத்தரங்கில் செவ்வாய்க்கிழமை பேசிய சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்படவிருந்த மோதலை நிறுத்தியது உட்பட பல உலகளாவிய மோதல்களை நிறுத்தியதில் பெய்ஜிங் முக்கிய பங்குவகித்ததாகக் கூறினார். இதனை இந்திய அதிகாரிகள் விசித்திரமானது மற்றும் தவறானது என கூறி நிராகரித்துள்ளனர்.
இது குறித்த அறிக்கையை சீன வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
"நீடித்த அமைதியை உருவாக்க, நாங்கள் ஒரு புறநிலை மற்றும் நியாயமான நிலைப்பாட்டை எடுத்துள்ளோம், மேலும் போர் அறிகுறிகளையும் அதற்கான மூல காரணங்களையும் கையாள்வதில் கவனம் செலுத்தியுள்ளோம். போர் பதட்டமான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான அணுகுமுறையைப் பின்பற்றி, நாங்கள் வடக்கு மியான்மர், ஈரானிய அணுசக்திப் பிரச்னை, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிற்கு இடையிலான பதட்டங்கள், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான பிரச்னைகள் மற்றும் கம்போடியா மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான சமீபத்திய மோதல் ஆகியவற்றில் சமரசம் செய்து வந்தோம்," என்று வாங் கூறினார்.
எந்தவொரு மூன்றாவது தரப்பு சமரசம் குறித்த கூற்றுகளையும் இந்தியா தொடர்ந்து நிராகரித்து வருகிறது. நான்கு நாள் மோதல் இருநாட்டு நேரடி ராணுவத் தொடர்பு மூலம் தீர்க்கப்பட்டதாக கூறி வருகிறது.
மேலும், இந்தியா ஏற்படுத்திய பெரும் சேதத்தால், பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளின் தலைமை இயக்குநர் இந்திய தலைமை இயக்குநரை அழைத்து பேசியதாகவும், இரு தரப்பினரும் மே 10 முதல் அனைத்து துப்பாக்கிச் சூடு, ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த ஒப்புக்கொண்டதாகவும் இந்தியா கூறி வருகிறது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய ஆயுத விநியோகஸ்தரரான சீனாவின் தற்போதைய பேச்சு, குறிப்பாக பாகிஸ்தானுடனான அதன் நெருங்கிய பாதுகாப்பு உறவுகளைக் கருத்தில் கொண்டு, நெருக்கடியின் போது அதன் பங்கு குறித்த கவனத்தை மீண்டும் புதுப்பித்துள்ளது.
நவம்பரில், அமெரிக்க-சீனா பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஆய்வுக் குழுவால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 'ஆபரேஷன் சிந்துர்' நடவடிக்கைக்குப் பிறகு சீனா ஒரு தவறான தகவல் பிரசாரத்தை அரங்கேற்றியதாகக் குற்றம் சாட்டியது.
ராஜதந்திர ரீதியாக, 'ஆபரேஷன் சிந்துர்' தொடங்கிய முதல் நாளிலேயே சீனா நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு அழைப்பு விடுத்தது, அதே நேரத்தில் இந்தியாவின் தாக்குதல்கள் குறித்து வருத்தமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.