துபையில் கார் ரேஸுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது நடிகர் அஜித் குமாரின் கார் விபத்தில் சிக்கியது.
நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். விடாமுயற்சி பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேதி தள்ளிவைக்கப்பட்டது. ஆதிக் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகும் என்று நேற்று(ஜன.6) அறிவிக்கப்பட்டது.
கார் மற்றும் பைக் பந்தயத்தில் அதிக ஆர்வமிக்க நடிகர் அஜித் வலிமை திரைப்படத்தின் போதும் விபத்தில் சிக்கினார்.
விடாமுயற்சி, குட் பேட் அக்லி திரைப்படங்களுக்கு நடுவே நடிகர் அஜித் குமார் வீனஸ் மோட்டர்ஸ் டூர்ஸ் என்கிற தன் இருசக்கர பயண நிறுவனத்தைத் துவங்கினார்.
இருசக்கர வாகனத்தில் தொலைத்தூரப் பயணங்களைத் திட்டமிடுபவர்களுக்கான தளமாக இது செயல்பட்டுவருகிறது. இதைத் தொடர்ந்து 'அஜித் குமார் ரேஸிங்' என்கிற கார் பந்தயத்திற்காக சர்வதேச அளவிலான வீரர்களை ரேஸிங்கில் ஈடுபட வைக்கும் நோக்கில் செயல்பட்டுவருகிறார்.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் கார் பந்தய சாகசத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த ஐகானிக் எஃப் 1 சர்க்யூட்டில், அஜித் தனது காருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அஜித்தின் ஸ்வாங்கி சிவப்பு ஃபெராரி காரின் விலை சுமார் ரூ. 9 கோடி ஆகும்.
இந்த நிலையில், துபையில் வருகிற 9 ஆம் தேதி தொடங்கும் கார் பந்தயத்துக்காக அஜித், தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவந்தார். தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித்தின் கார் ரேஸிங் டிராக்கின் மைய சுவரில் மோதியது. இதில், விபத்தில் கார் சேதமடைந்த போதும் நடிகர் அஜித் காயமின்றி உயிர் தப்பி, தற்போது நலமுடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.