டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ஒருபோதும் வராது: அமைச்சர் மூர்த்தி திட்டவட்டம்

மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது, வரக்கூடாது என சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தி
அமைச்சர் மூர்த்தி
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை எதிா்த்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில், மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது என அமைச்சர் மூர்த்தி அரிட்டபட்டியில் மக்கள் முன்பு உறுதியாக தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 7-ஆம் தேதி காவல்துறையின் தடையை மீறி நரசிங்கம்பட்டி பெருமாள்மலையிலிருந்து மதுரை வரை சுமார் 16 கி.மீ. தூரம் பேரணியாகச் சென்று மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பாக அடையாளப் போராட்டம் ஒன்றை பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்தினர். ஜல்லிக்கட்டுக்காக நடந்த போராட்டத்தை அடுத்து நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் போராட்டமாக இது அமைந்தது.

அந்த போராட்டத்தின் முடிவில், மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை முழுமையாக கைவிட வேண்டும் எனவும், தமிழக அரசு நடப்பு சட்டப்பேரவைத் கூட்டத்தொடரில் மதுரையை தமிழ்ப்பண்பாட்டு மண்டலமாகவும், பெரியாறு பாசனப் பகுதி முழுவதையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டமியற்றி அரசிதழில் வெளியிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது

இந்த நிலையில், தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி, 'அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி உள்ளிட்ட கிராமங்களில் மக்களை சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசு டங்ஸ்டன் வருவதை ஒருபோதும் ஏற்கவில்லை. மேலூர் பகுதியில் ஒரு போதும் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் வராது, வரக்கூடாது என சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சி ஆதரவோடு தீர்மானம் இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என உறுதியாக தெரிவித்தார்.

மக்களைச் சந்தித்து விளக்கம்

பின்னர் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில், மேலூர் பகுதியில் ஒருபோதும் டங்ஸ்டன் திட்டம் வராது, வரக்கூடாது என பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நேரடியாக மக்களைச் சந்தித்து விளக்கம் அளித்து வருகிறோம். இங்கிருந்து ஒரு பிடி மண்ணைக்கூட அள்ள முடியாது என்று நேற்று பேரவையில் நிதியமைச்சரும் குறிப்பிட்டுள்ளார். மக்களைச் சந்தித்து அச்சத்தைப் போக்க முதல்வர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் நானும், மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உங்களிடம் பேச வந்துள்ளோம்.

தமிழக அரசின் கடமை

தற்போது தமிழக முதல்வரும், அரசும் எடுத்துள்ள இந்த முடிவே இறுதியானது. டங்ஸ்டன் திட்டம் வராமல் இருப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும். பேரவையில் இயற்றப்பட்ட தீர்மானமே சட்டம்தான். இது ஜனநாயக நாடு. ஆகையால் யார் வேண்டுமானாலும் வரலாம், பேசலாம். மேலூர் பகுதி மக்களைக் காப்பாற்றுவது தமிழக அரசின் கடமை என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். அதனை அனைத்துக் கட்சிகளும் ஆதரித்திருக்கின்றன. யார் எதைப்பற்றிச் சொன்னாலும் தமிழக அரசு இந்த மக்களுக்கு நிச்சயமாக பாதுகாப்பாக இருக்கும்' என்றார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி அ.வல்லாளபட்டி, கிடாரிப்பட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி ஆகிய கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து, தமிழக அரசின் நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com