பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சைப் பேச்சு!

பெரியார் பற்றி நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் சர்ச்சைக் கருத்து...
பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? - சீமான் சர்ச்சைப் பேச்சு!
Center-Center-Chennai
Published on
Updated on
2 min read

வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் பற்றி அவதூறாகப் பேசியதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

முன்னதாக நேற்று(புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாருக்கும் சமூக சீர்திருத்தத்துக்கும் என்ன சம்மந்தம்? எனப் பேசியிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் வீட்டை முற்றுகையிடச் சென்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் காவல்துறையால் இன்று கைது செய்யப்பட்டனர். அங்கு இருந்த கட்சி நிர்வாகியின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் சற்று பரபரப்பும் ஏற்பட்டது.

இதையும் படிக்க | 'எமர்ஜென்சி' படத்தைப் பார்க்க கங்கனா அழைப்பு! ராகுல், பிரியங்காவின் பதில் என்ன?

தொடர்ந்து புதுச்சேரியில் இன்று(வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மீண்டும் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

'முன்பு பெரியார் பற்றி தெளிவில்லாமல் அவருக்கு ஆதரவு தெரிவித்தேன். இப்போது தெளிவாகிவிட்டேன். தமிழ், தமிழர்களை இழிவுபடுத்தியவர் பெரியார்.

பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்தார்? பெரியாருக்கு கொள்கை என்ற ஒன்றே இல்லை.

வள்ளலாரைத்தாண்டி பெரியார் என்ன சமூக சீர்திருத்தம் செய்துவிட்டார்? திராவிடம் என்று கூறியவர்கள் எல்லாம் திருடர்கள்.

பெரியார் பேசினார் என்றால் பரவாயில்லை. பெரியார்தான் எல்லாம் செய்தார் என்றால் எப்படி? வஉசி, இரட்டைமலை சீனிவாசன், மறைமலை அடிகள் எல்லாம் இல்லையா?' என்று பேசியுள்ளார்.

மேலும், 'அம்பேத்கரையும் பெரியாரையும் ஒப்பிடுவது முரணான ஒன்று. அம்பேத்கர் உலகின் தலைசிறந்த கல்வியாளர். பெரியார் தோன்றுவதை எல்லாம் பேசுபவர்.

நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கும் யாரும் அடிமையில்லை என்று கூறியவர் அம்பேத்கர். ஆனால் பெரியார் சொல்வது அந்த கோட்பாடு இல்லை. அவர் சிந்தித்தது, பேசியது, எழுதியது எல்லாம் தமிழ் பேரினத்திற்கு எதிரானது.

திராவிடம் பேசி, எங்கள் முன்னோர்களை மறைக்கும்போது அதனை ஒழிக்க வேண்டிய தேவை உள்ளது.

என் இனச்சாவில்தான் இவர்கள்(திராவிடர்கள்) என் எதிரி எனத் தெரிந்தது. 2008-ல் என் தலைவரை சந்திக்கும்வரை நானும் இந்தக் கூட்டத்தில்தான் ஒருவனாக இருந்தேன். அவரைச் சந்தித்த பிறகுதான் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து வருகிறேன்.

தமிழ் மொழியை மிகவும் மோசமாகப் பேசிய பெரியார் எந்த மொழியில் பேசினார்? என் மொழியை மிகவும் இழிவுபடுத்தியவர் அவர். எந்த நிலையில் மொழிக்காக அவர் நின்றிருக்கிறார். மொழியை விட்டுக்கொடுத்து சமூக சீர்திருத்தம் என்று என்ன இருக்கிறது?

பெரியாரின் நூல்களை அரசுடைமையாக்கிவிட்டு என்னிடம் சான்று கேளுங்கள்.

பெரியார் பெரிய செல்வந்தர். சொத்துக்கு வாரிசு தேடி 72 வயதில் 26 வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனது பெரும் செல்வத்தை நாட்டின் விடுதலைப் போராட்டத்துக்காக விற்றவர் வஉசி. அவர் கடைசி காலத்தில் வறுமையில் தள்ளப்பட்டார். பெரியார் போராளியா? வஉசி போராளியா?

பெரியாரே எனக்கு வேண்டாம். திராவிடம் பேசுபவர்களை ஒழிப்பதுதான் எனது கொள்கை' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com