ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

விழுப்புரம் மாவட்ட வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு

வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

News image

விழுப்புரம் அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்ட வாசப் பெருமாள் திருக்கோயிலில் பரமபத வாசல் திறப்புக்குப் பின்னர் காட்சியளித்த பெருமாள்.

Updated On :10 ஜனவரி 2025, 3:00 am

விழுப்புரம்: வைகுந்த ஏகாதசி திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு வைணவத் தலங்களில் பரமபத வாசல் திறப்பு வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

விழுப்புரம் நகரின் பழைமை வாய்ந்த அருள்மிகு ஜனகவல்லித் தாயார் சமேத வைகுண்டவாசப் பெருமாள் திருக்கோயிலில் பகல்பத்து உற்சவத்துடன் வைகுந்த ஏகாதசி திருவிழா டிசம்பர் 31-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடர்ந்து நாள்தோறும் முற்பகல் 11 மணிக்கு வைகுண்டவாசப் பெருமாளுக்கு அர்ச்சனை, தீபாராதனையும், தொடர்ந்து தீர்த்த பிரசாதம் வழங்குதலும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இராப்பத்து முதல் நாளான வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதையொட்டி வைகுண்டவாசப் பெருமாளுக்கு கருவறையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஸ்ரீ தேவி -பூதேவி சமேதராய் எழுந்தருளிய வைகுண்டவாசப்பெருமாள்(உற்சவர்) பிரகாரம் வலம் வந்து அதிகாலை 5.15 மணிக்கு பரம்பத வாசல் வழியாக பிரவேசித்து முதலில் நம்பெருமாளுக்கும், பின்னர் பக்தர்களுக்கும் காட்சியளித்தார். நிகழ்வில் விழுப்புரம் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களும், பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றுசுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.

ஆனந்தவரதராஜப் பெருமாள்

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்திலுள்ள ஸ்ரீபெருந்தேவி தாயார் உடனுறை ஆனந்தவரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி பெருவிழாவையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயார் சமேதராய் பரமபதவாசல் வழியாக ஆனந்தவரதராஜப்பெருமாள் பிரவேசித்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர்

விழுப்புரம் அருகிலுள்ள பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ஸ்ரீதேவி-பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபதவாசல் வழியாக அதிகாலை 5 மணிக்கு பிரவேசித்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

சிறுவந்தாடு லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், கோலியனூர் வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோன்று வளவனூர் வரதராஜப்பெருமாள், காணை அருகிலுள்ள பெரும்பாக்கம் சீனுவாசப்பெருமாள், வளவனூர் அக்ரஹாரத்திலுள்ள வேதவல்லி நாயகி சமேத லட்சுமிநாராயணப் பெருமாள் திருக்கோயில், திண்டிவனம் கனகவல்லி தாயார் உடனுறை லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், சிங்கவரம் ரங்கநாதர் திருக்கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகங்கள் செய்திருந்தன. சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸôரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

இதுபோன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் திருக்கோயில், பரிக்கல் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், உளுந்தூர்பேட்டை கனகவல்லித் தாயார் உடனுறை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு திருக்கோயில்களில் வெள்ளிக்கிழமை காலை பரமபத வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று,சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.