கோப்புப் படம்
கோப்புப் படம்

34 ஆண்டுகளுக்கு முன் தப்பிய குற்றவாளி! இறுதிக்காலத்தை சிறையில் கழிக்க விருப்பம்!

கேரளத்தில் 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சிறைக்கு திரும்பிய குற்றவாளியைப் பற்றி...
Published on

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறையில் இருந்து தப்பிய குற்றவாளி 34 ஆண்டுகள் கழித்து தனது இறுதிக் காலத்தை சிறையில் கழிக்க விரும்பி சரணடைந்துள்ளார்.

கேரளத்தின் நேமோம் பகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு தன்னோடு வாழ்ந்து வந்த பெண்ணைக் கொலை செய்த குற்றத்திற்காக பாஸ்கரன் என்பவர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரத்தின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதே ஆண்டில் பாஸ்கரன் அந்த சிறையில் இருந்து தப்பி சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது திருவனந்தபுர மத்திய சிறைச்சாலைக்கு 64 வயது முதியவர் ஒருவர் வந்து சரணடைந்துள்ளார். அவரது ஆதார் அட்டையில் ராமதாஸ் என்று பெயர் குறிப்பிட்டுள்ள நிலையில், கடந்த 1991 ஆம் ஆண்டு பெண்ணின் கொலை வழக்கில் கைதாகி அந்த சிறையில் இருந்து தப்பியது அவர் தான் என்று கூறியுள்ளார்.

ஆனால், இதை உறுதி செய்ய பாஸ்கரனின் புகைப்படம் கூட அதிகாரிகளிம் இல்லாததினால், அம்மாவட்டத்தின் காவல் நிலையங்களில் இதுகுறித்த ஆவணங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்று கேட்டு சிறைக்காவல் துறையினர் கடிதம் அனுப்பினர்.

இதையும் படிக்க: சைஃப் அலிகான் வழக்கு! கைதானவருக்கு போலீஸ் காவல் மேலும் நீட்டிப்பு

இதனைத் தொடர்ந்து, மஞ்சேஸ்வர் காவல் நிலையம் சரணடைந்துள்ள ராம்தாஸ்தான் தப்பிச் சென்ற குற்றவாளி பாஸ்கரன் என்று உறுதி செய்தனர்.

பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சிறையில் இருந்து தப்பிய பாஸ்கரன், தனது பெயரை ராம்தாஸ் என்று மாற்றிக்கொண்டு காசர்கோடு மாவட்டத்தில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகக் கூறியுள்ளார்.

மேலும், சில ஆண்டுகள் முன்னர் அவரது மனைவி இறந்துவிட்டதாகவும் அவரது பிள்ளைகள் வேறு ஊர்களுக்கு குடிபெயர்ந்து வாழ்ந்து வருவதாகவும், தனது இறுதிக்காலத்தை சிறையில் கழிக்க விரும்பி சரணடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, திருவனந்தபுரம் மத்திய சிறை அதிகாரிகள் கூறுகையில், இது போன்ற சம்பவங்கள் மிகவும் விசித்திரமானது என்றும் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு அவர் தற்போது மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com