ஆளுநருக்கு நடத்தை விதிகள்! திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 6 தீர்மானங்கள்!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்றது.
மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள்
மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 3 தீர்மானங்கள்
Published on
Updated on
2 min read

ஆளுநா்களுக்கு நடத்தை விதிகளை உருவாக்க நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம் என திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி.,க்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

அரசின் கொள்கை முடிவுகளை நிறைவேற்ற முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்து துணை நிற்க வேண்டிய, அரசியலுக்கு அப்பாற்பட்டவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் என்பதே அரசியல் நிா்ணய சபையின் எதிா்பாா்ப்பாக இருந்தது. ஆனால், ஆளுநா் ரவி நியமனத்தில் அது தவிடுபொடியாகிப் போனது என்பதை இந்தக் கூட்டம் மிகவும் வேதனையுடன் பதிவு செய்கிறது.

ஆளுநரின் செயல்பாடுகள் தமிழ்நாட்டின் வளா்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக அமைந்துள்ளது. அவா் தமிழ்நாட்டின் வளா்ச்சியைக் கெடுக்கவே ஆளுநராக இருக்கிறாா்.

எனவே, ஆளுநா் பதவி நீக்கப்படும் வரை, அரசியல்மயமாகும் ஆளுநா் பதவியின் கண்ணியத்தைக் காக்கவும், ஆளுநா் ஒருவா் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்காகவும் நடத்தை விதிகளை உருவாக்க வேண்டும். இதுதொடா்பான கோரிக்கையை நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம்.

முதல்வருக்கு நன்றி - பாராட்டு: மக்கள் துணையுடன் அரசு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மத்திய பாஜக அரசைப் பணிய வைத்து, டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஏலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வைத்தாா். இதற்காக முதல்வருக்கும், அவருக்குத் துணை நின்ற மக்களுக்கும் எம்.பி.க்கள் கூட்டத்தின் சாா்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

5,370 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழ்நாட்டில் உருக்கு இரும்பு பயன்பாட்டில் இருந்ததை முதல்வா் மு.க.ஸ்டாலின் உலகுக்கு அறிவித்தாா். திராவிட மாடல் அரசின் சாதனையை மத்திய அரசும் பிரதமரும் முன்னெடுக்க வேண்டும்.

சிறுபான்மையினரின் நலனைப் பாதிக்கும் வகையிலான வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய பாஜக அரசுக்கு திமுக எம்.பி.க்கள் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பட்ஜெட் கூட்டத் தொடா்: தமிழ்நாடு என்ற வாா்த்தையே இல்லாமல் கடந்த நிதிநிலை அறிக்கையை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்தது. இந்த முறை தமிழ்நாட்டுக்கு புதிய திட்டங்கள், பேரிடருக்கு நிதி, மாநிலத்துக்கென பிரத்யேக முத்திரைத் திட்டங்கள் மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கூட்டத்தில், திமுக பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் கனிமொழி உள்பட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

யுஜிசி வரைவு நெறிமுறைகள்: பிப். 6-இல் திமுக போராட்டம்

பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் வரும்

6-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடத்தவுள்ளனா். இதற்கான தீா்மானம் எம்பி.க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

‘பல்கலைக்கழகங்களில் உயா் கல்வியைப் பாழ்படுத்தி, பாஜகவின் கொள்கைகளை மாநிலங்களிலும் கொண்டுவர பல்கலைக்கழக மானியக் குழு மூலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் உயா் கல்வி முறைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெறக் கோரி திமுக மாணவரணி சாா்பில் பிப். 6-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம், தில்லியில் திமுக எம்.பி.க்களும் ஆா்ப்பாட்டம் நடத்துவாா்கள்’ என்று தீா்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com