'சங்கியாக செயல்பட முடியாது' - நாதக மாநில ஒருங்கிணைப்பாளர் விலகல்!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஜெகதீச பாண்டியன்
ஜெகதீச பாண்டியன்
Published on
Updated on
2 min read

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி வரும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெகதீச பாண்டியன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள்(சீமான்) பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது எனவும் சங்கியாகவும் செயல்பட முடியாது எனவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெகதீச பாண்டியன் 5 பக்க அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், "நமக்கு நேர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்ட பாண்டே, ஹெச். ராஜா, அண்ணாமலை, தமிழிசை ஆகியோர் உங்களை 'தீம் பார்ட்னர்' என்று கூறி வலிய வந்து உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தக் கருத்துக்கெல்லாம் சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். மறுப்பு வராததால் பெரியாரைப் பற்றி சொன்ன கருத்துக்கள் சீமானின் கருத்துதானே ஒழிய என்னைப் போன்றவர்களின் கருத்து அல்ல என்று ஜனநாயகப் பூர்வமாக எனது கருத்தை தெரிவித்திருந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள முதலாளிதத்துவ கட்சிகளில்கூட கட்சிக்குள் சிறிது ஜனநாயகம் இருக்கிறது. 'ஆகச் சிறந்த ஜனநாயகத்தை கட்டி எழுப்புவோம்' என்ற முழக்கத்தோடு ஆரம்பித்த நமது கட்சிக்குள் எந்த ஜனநாயகமும் இல்லை.

என் கருத்தியலுக்கு எதிராக பேசுவதாக நினைத்துக்கொண்டு தமிழுக்காக வாழ்நாள் முழுக்க அரசியல் செய்ய வேண்டும் என்று உங்களோடு வந்த என்னை அவதூறு பரப்புகின்றனர்.

வலதுசாரி ஆதரவு கருத்துக்கு சீமான் மறுப்பு தெரிவிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில் கோவை விமான நிலையத்தில் பிரசாந்த் கிஷோரைவிட பாண்டே அறிவு மிக்கவர் என்றும், கொஞ்ச நாளைக்கு முன்பு பைத்தியம் என்று சொன்னவரை தமிழ் பேரறிஞர் ஹரிகர ராஜ சர்மா என்றும் நீங்கள் முழு சங்கிகள் பேசுவதுபோல பேசுவது பெருத்த அச்சத்தை ஏற்படுத்துகிறது

நமது தேசிய தலைவரையும் தமிழீழ விடுதலைக்கு பெரும்பங்காற்றிய திராவிட இயக்கத் தோழர்களின் குறியீடாக இருக்கக்கூடிய பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்துவது தமிழ்நாட்டில் தமிழர் அரசியல் வளர்ச்சி பெறாமல் இருக்க சிலரின் சதித்திட்டம் என்பது தெரிகிறது.

தமிழரின் அறிவாகவும் ஆற்றலாகவும் உணர்வாகவும் இருக்க்கூடிய தலைவர் பிரபாகரனின் குடும்பத்திலுள்ள கார்த்திக் மனோகரனை சிங்களவனே பயன்படுத்த தயங்கக்கூடிய வார்த்தையை பயன்படுத்தி வசைபாடினீர்கள்.

மாவீரர் குடும்பத்திற்கே மரியாதை கொடுக்காத நீங்கள் எப்படி மற்றவர்களுக்கு மரியாதை கொடுப்பீர்கள்?

வரலாறு தந்த மாபெரும் வாய்ப்பை தவற விட்டுவிட்டீர்கள்.

ஒருகாலும் இந்த மண்ணில் அரசியல் மாற்றத்தை வலதுசாரி சிந்தனையோடு உங்களால் கொண்டுவர முடியவே முடியாது.

இனிமேல் என்னால் வலதுசாரிகளின் வழிகாட்டுதலில் நீங்கள் பேசும் அரசியலின் பெயரால் தமிழுக்கும் தமிழ் தேசியத்திற்கும் துரோகம் செய்ய முடியாது. சங்கியாகவும் செயல்பட முடியாது என்ற காரணத்தால் நான் உயிருக்கு உயிராக நேசித்து தொடங்கிய வளர்த்த கட்சியில் இருந்து கனத்த இதயத்தோடு விலகுகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com