எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்

அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்படாயோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்.
பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்
Published on
Updated on
2 min read

அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்படாயோ உங்களுக்கு தேவையில்லை. உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தொண்டர்களுக்கு அவர் உருக்கமாக எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்துத் தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாமக வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வரலாற்று சிறப்பு மிக்க இந்த தருணத்தில் உலகெங்கும் வாழும் பாட்டாளி சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன என்கிற போதே, இந்த 36 ஆண்டுகளில் ஓர் அரசியல் கட்சியாக என்னென்ன நாம் சாதித்தோம்? என்ற வினாவை நீங்களும் எழுப்புவீர்கள், நானும் என்னை நோக்கி அதே வினாவைத்தான் எழுப்புவேன்.

பாமக துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ - மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்றுத் தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது. மனநிறைவானது.

தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நம்மை விட அதிகமாக போராட்டக் களத்தில் நின்ற ஒரேயொரு கட்சியை யாராவது காட்டிவிட முடியுமா?

நேற்று எதிர்க்கட்சியாக இருந்து எதிர்த்த விஷயங்களை, இன்று ஆளுங்கட்சி ஆனதும், எதிர்த்த விஷயத்துக்கே அங்கீகாரம் கொடுத்து ஆதரிக்கும் 'இரண்டு கழக'ங்களையும், மத்தியில் ஆண்ட காங்கிரசையும், இப்போது ஆள்கிற பாஜகவையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

மக்கள் நலன்சார்ந்து எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பாமக இருந்து வருவதை நினைத்து பெருமையடைகிறேன்.

மக்கள் குரலாகவே நம்முடைய குரல் எப்போதும் இருக்கும் காரணத்தால், எந்தவொரு விஷயமாக இருந்தாலும், அதில் பாமக நிலைப்பாடு என்னவென்று எல்லாத் தரப்பும் உற்று நோக்கும் நம்பிக்கை கட்சியாக இருக்கிற ஒன்று போதுமே நிம்மதிக்கு !

பாமக தொண்டர்களை பொறுத்தவரை, 'நாம் ஆள்கிற காலம், இன்றே வந்து விடாதா அல்லது இரண்டொரு நாளில் வந்து விடாதா?' என்ற ஆற்றாமை இருக்கத்தான் செய்யும், அதை நானும் அறிவேன். நம்முடைய கையில் ஆட்சியதிகாரம் இல்லாத போதே நாம் வென்றெடுத்திருக்கும் மக்கள் நலன்சார்ந்த திட்டங்களும், தீர்வுகளும் ஏராளம். ஆள்வோரால் கூட சாத்தியமற்ற பல்வேறு மக்கள்நலப் பணிகளை பாமக செய்து முடித்திருக்கிறது என்ற உண்மையை நமக்கு 'எதிர் அரசியல்' செய்வோர்கூட மறுக்க முடியாதே.

நம்மால் பொது ஆதாயம் பெற்றோர், பொதுவெளியில் அதை ஒப்புக்கொள்ள 'சுயம்' தடுத்தாலும், நான்கு அறைகளுக்குள் நம் உழைப்பில் பெற்ற பலனை குடும்பத்தாரோடு பேசிக் களிப்பதை மறுக்கத்தான் முடியுமா!

தமிழ்நாட்டு அரசியலின் திசையை தீர்மானிக்கும் சக்தி பாமக என்பதை காலம், தன்னுடைய பக்கங்களில் மறக்காமல் பதிவு செய்தே வைத்திருக்கிறது. வன்னியர் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக 20% இட ஒதுக்கீடு, 10.50% வன்னியர் இடஒதுக்கீடு, 3.50% இஸ்லாமியர் இட ஒதுக்கீடு, 3% அருந்ததியர் இட ஒதுக்கீடு என தமிழ்நாட்டளவில் 4 இட ஒதுக்கீடுகள், தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.50% இட ஒதுக்கீடு; என மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை வென்றெடுத்தது நாம் தான்.

சமூகநீதிக்கான வரலாற்று ஆவணங்களை மொத்தமாக அடுக்கி வைத்துப் பார்த்தால், அதில் தொண்ணூறு விழுக்காடு, பாமக முன்னெடுத்த போராட்டங்கள் அல்லவா அணிவகுக்கும்! சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில், மத்திய அரசை எதிர்பார்த்து காத்திராமல்; மாநில அரசுகளே அதைச் செய்யலாம் என்று, கால் நூற்றாண்டுக்கும் மேலாக வலியுறுத்தி வரும் கட்சி, பாமக மட்டும்தான்.

தமிழ்நாட்டின் தலைவர்கள் தவிர, தமிழ்நாட்டை ஆண்ட- ஆண்டு கொண்டிருப்பவர்கள் தவிர, பிற மாநிலத்தார் அதை இரு காதுகளையும் திறந்து வைத்துக் கேட்டார்கள்; இன்று பல மாநிலங்கள், தாமாகவே சாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாராகி பல மாநிலங்களில் அது சாத்தியமாகி வருகிறது.

பாமகட்சி 37- ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்தத் தருணத்தில் உங்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், "மக்களை சந்தியுங்கள், அவர்களுடன் இணைந்து வாழுங்கள், அவர்களின் தேவைகளை அறியுங்கள், அவர்கள் கேட்காமலேயே அவர்களுக்காக போராடி , அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாருங்கள்" என்பதைத் தான்.

என் வாழ்நாளில் 95 ஆயிரம் கிராமங்களுக்கு நான் நடந்தே பயணம் போயிருக்கிறேன், நடந்து போய்த்தான் எளிய மக்களை அவர்கள் வாழ்விடத்திலேயே சந்தித்து அவர்களின் பிரச்னைகளை என் தோளில் தூக்கி சுமந்திருக்கிறேன். உங்களை 95 ஆயிரம் கிராமங்களுக்குப் போகச் சொல்லவில்லை, குறைந்தது 95 கிராமங்களுக்காவது போய் வாருங்கள். காரில் போகாதீர்கள், அவர்களை விட்டு அந்நியமாகி நிற்காதீர்கள், மோட்டார் சைக்கிளில் போங்கள், உங்களோடு மனம் விட்டுப் பேசுவார்கள். இன்னும் தீர்க்க முடியாத பிரச்னைகளை மக்கள் தலையில் சுமந்து திரிகிறார்கள், அந்த சுமைகளை நீங்கள் இறக்கி வாங்கிக் கொள்ளுங்கள் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Summary

You don't need any questions or doubts about your political future. I am your future and present. I stand with you as always, said PMK founder Ramadoss.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com