
புதுதில்லி: தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காலமானாா். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
கோட்டா சீனிவாச ராவ், அவரது திரைத் துறைத் திறமைக்காகவும் பல்துறைத்திறனுக்காகவும் எப்போதும் நினைவுகூரப்படுவார். தனது அற்புதமான நடிப்பால் பல தலைமுறை பாா்வையாளா்களை கவா்ந்தாா்.
மேலும், சமூக சேவையிலும் முன்னணியில் இருந்து, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவா்களுக்கு அதிகாரம் அளிக்க அவா் பாடுபட்டதாக புகழஞ்சலி செலுத்தியுள்ள மோடி, அவரது குடும்பத்தினருக்கும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி. என கூறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான ‘பிராணம் காரீது’ எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கோட்டா சீனிவாச ராவ், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறாா். ‘சாமி’, ‘திருப்பாச்சி’, ‘கோ’, ‘சகுனி’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலக ரசிகா்களிடையே அவா் பிரபலமடைந்தார்.
ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் கிழக்கு விஜயவாடா பேரவைத் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக (1999-2004) கோட்டா சீனிவாச ராவ் இருந்துள்ளாா். 2015 இல் அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது அளித்து இந்திய அரசு கௌரவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.