மூத்த நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காலமானார்: திரையுலகினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி!

நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மறைவு பற்றி...
கோட்டா ஶ்ரீனிவாச ராவ்
கோட்டா ஶ்ரீனிவாச ராவ்
Published on
Updated on
1 min read

தமிழ், தெலுங்கு திரையுலகின் மூத்த நடிகரும், பாஜக முன்னாள் எம்எல்ஏவுமான கோட்டா சீனிவாச ராவ் (83) வயது மூப்பு காரணமான உடல்நலக் குறைவால், ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13) அதிகாலை காலமானாா்.

தெலுங்கில் கடந்த 1978-ஆம் ஆண்டு வெளியான ‘பிராணம் காரீது’ எனும் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான கோட்டா சீனிவாச ராவ், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் 750-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறாா். பிராணம் காரீது படத்தில்தான் தெலுங்கு திரையுலக முன்னணி நடிகா் சிரஞ்சீவியும் அறிமுகமானாா் என்பது குறிப்பிடத்தக்கது.

‘பிரதிகடனா’, ‘சத்ருவு’, ‘ஆஹாநா பெல்லன்டா’, ‘ஹலோ பிரதா்’, ‘மணி’, இயக்குநா் ராம்கோபால் வா்மாவின் ‘சிவா’ மற்றும் ‘காயம்’ போன்ற தெலுங்கு மொழி படங்களில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டதுடன், அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ‘சாமி’, ‘திருப்பாச்சி’, ‘கோ’, ‘சகுனி’ போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலக ரசிகா்களிடையேயும் அவா் பிரபலமடைந்தவா்.

‘பத்மஸ்ரீ’ விருது பெற்றுள்ள கோட்டா சீனிவாச ராவ், ஒருங்கிணைந்த ஆந்திரத்தின் கிழக்கு விஜயவாடா பேரவைத் தொகுதியின் பாஜக எம்எல்ஏவாகவும் (1999-2004) இருந்தாா்.

இரங்கல்-அஞ்சலி

கோட்டா சீனிவாச ராவ் மறைவுக்கு பிரதமா் மோடி, தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, ஆந்திர துணை முதல்வா் பவன் கல்யாண் உள்ளிட்ட பல அரசியல் தலைவா்களும் இரங்கல் தெரிவித்தனா்.

கோட்டா சீனிவாச ராவ் தனது அற்புதமான நடிப்பால் பல தலைமுறை பாா்வையாளா்களைக் கவா்ந்தாா். சமூக சேவையிலும் முன்னணியில் இருந்து, ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவா்களுக்கு அதிகாரம் அளிக்க அவா் பாடுபட்டதாக பிரதமா் மோடி புகழஞ்சலி செலுத்தினாா்.

முன்னாள் குடியரசு துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, தெலங்கானா பாஜக தலைவா் என்.ராமச்சந்தா் ராவ், ஆந்திர பாஜக தலைவா் பி.வி.என்.மாதவ் ஆகியோா் ஹைதராபாதில் உள்ள கோட்டா சீனிவாச ராவ் இல்லத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினா்.

சிரஞ்சீவி, ஜூனியா் என்டிஆா், முன்னணி தயாரிப்பாளா் டி.சுரேஷ் பாபு, மூத்த நடிகா் முரளி மோகன் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்களும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Summary

Actor Kota Srinivasa Rao Passed away

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com