பெருமுதலாளிகள் மோசடி என்றால் வங்கிகள் கைகளை இறுகக் கட்டிக் கொள்வது ஏன்?: சு.வெங்கடேசன் எம்.பி.

சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்வது ஏன்?
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் - மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் - மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி
Published on
Updated on
2 min read

அனில் அம்பானி தொடர்புடைய வங்கி கணக்குகளை “மோசடி” என ஸ்டேட் வங்கி வகைப்படுத்தியுள்ளது. ஆனால்… பல்லாயிரம் கோடி மோசடி பணத்தை 9 ஆண்டுகளாக மீட்கவில்லை. சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்வது ஏன்? என மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர் காம்) ஸ்டேட் வங்கியிடம் வாங்கிய கடன் குறித்த கேள்வியை எழுப்பி இருந்தேன்.

அதற்கு நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரி பதில் அளித்துள்ளார். அந்த பதிலில் அவர் குறிப்பிட்டு இருப்பது என்னவெனில்,

ரிசர்வ் வங்கியின் "மோசடி இடர் மேலாண்மை" வழிகாட்டல்கள் மற்றும் வங்கியின் இயக்குநரவை வகைப்படுத்தல் கொள்கையின் அடிப்படையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் மற்றும் அதன் அதன் பிரதான பங்குதாரர் அனில் அம்பானி ஆகியோரை "மோசடி" என ஸ்டேட் வங்கி 13.6.2025 அன்று வகைப்படுத்தி இருக்கிறது. மும்பை பங்குச் சந்தையின் தகவல் வெளியீட்டு விதிகளின்படி ஸ்டேட் வங்கியின் மோசடி வகைப்படுத்தலுக்கு தான் ஆளாகி இருப்பதை 1.7.2025 அன்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆயிரமாயிரம் கோடிகள்

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திடமிருந்து ஸ்டேட் வங்கிக்கு வர வேண்டிய கடன் தொகை மட்டுமே ரூ.2227.64 கோடிகள் (வட்டி இதர செலவுகள் 26.8.2016 லிருந்து சேரும்) மற்றும் நிதி அல்லாத வங்கி உத்தரவாதம் ரூ.786.52 கோடிகள்.

இப்போது திவால் சட்டம் 2016 நடைமுறையின் கீழான நடவடிக்கைக்கு ஆர்.காம் நிறுவனம் ஆளாகி உள்ளது. கடன் அளித்தோர் குழு அளித்த தீர்வு தீர்மானம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் 6.3.2020 அன்று சமர்ப்பிக்கப்பட்டு அதன் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. இது தவிர அனில் அம்பானி மீது தனிப்பட்ட முறையிலும் திவால் சட்டத்தின் அடிப்படையில் ஸ்டேட் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.

மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதத்துக்கு  மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரியின் பதில் கடிதம்
மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதத்துக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதுரியின் பதில் கடிதம்

காலம் கடந்த கதை

ஏற்கனவே ஸ்டேட் வங்கி அனில் அம்பானி தொடர்பான இந்த வங்கி கணக்குகளை 10.11.2020 இல் மோசடி என்று வகைப்படுத்தி சி.பி.ஐ வசம் 5.01.2021 அன்று புகார் தந்தது. ஆனால் 6.1.2021 இல் தில்லி உயர்நீதிமன்ற ஆணையின் காரணமாக புகார் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. அதன் பின்னர் உச்ச நீதிமன்றத்தின் 27.3.2023 ஆணையின்படி மோசடி வகைப்படுத்தல் குறித்து முறையிட ஒரு வாய்ப்பு தருமாறு பணிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் மோசடி வகைப்படுத்தல் வங்கியால் 2.9.2023 அன்று திரும்பப் பெறப்பட்டது.

மீண்டும் "மோசடி வகைப்படுத்தல்" ஆய்வு மேற்கொள்ளப்பட்டு ரிசர்வ் வங்கியின் 15.7.2024 சுற்றறிக்கையின் அடிப்படையில் "மோசடி," என மறுபடியும் வகைப்படுத்தப்பட்டு ரிசர்வ் வங்கிக்கு 24.6.2025 இல் அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. சிபிஐக்கும் புகார் தருவதற்கான தயாரிப்பு நடந்தேறி வருகிறது என்று அமைச்சர் பதிலில் தெரிவித்துள்ளார்.

சு.வெங்கடேசன் கருத்து

"சாமானிய மக்களின் கடன்கள் என்றால் கழுத்தில் துண்டைப் போட்டு இழுக்கிற வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்கின்றன. பெரும் தொழிலதிபர்கள் எனில் கடனை வசூலிக்க எவ்வளவு காலங்கள் ஆகின்றன என்பது அதிர்ச்சியாக உள்ளது. ஏதோ தொடர் நாவல் போல 9 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டு கொண்டே போகிறது. வங்கிகளிடம் வாங்கியுள்ள மொத்தக் கடன், வட்டி, செலவுகள் சேர்த்தால் ரூ. 31850 கோடிகள் என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால் அமைச்சர் பதில் மூலக் கடனை மட்டுமே பதிலில் குறிப்பிட்டுள்ளார் எனக் கருதுகிறேன். மக்களிடம் மேலும் வெளிப்படையாக அரசு இருக்க வேண்டும். காரணம் இவை எல்லாம் மக்களின் வியர்வை, ரத்தத்தின் விளைபொருளான சேமிப்புகள். சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி பெரும் முதலாளிகள் தப்பிக்க அனுமதிக்க கூடாது. விரைவான நடவடிக்கைகள் தேவை" என்று சு.வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

தேசிய சராசரியை விஞ்சினோம்; மிஞ்சினோம்.! திமுக 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம்.! - முதல்வர் ஸ்டாலின்

Summary

வட்டி மற்றும் செலவுகள் உட்பட வங்கிகளில் இருந்து பெறப்பட்ட மொத்த கடன் ரூ. 31850 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமைச்சர் தனது பதிலில் அசல் கடனை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com