
திண்டிவனம்: உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவப் படத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபினமாக்கி, என் பெயரில் நடைபயனம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே என பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
திண்டிவனத்தில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களுடன் பேசியதாவது:
ஒவ்வொரு செங்கலாக கட்டிய கட்சி என்ற மாளிகையில் நான் குடியமர்த்தியவரே என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவுக்கு அன்புமணி செயல்பாடுகள் இருந்தன என்று ராமதாஸ் தெரிவித்தார்.
பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இருவருக்கும் இடையே கருத்து மோதல் நீடித்து வருவதால் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பமும், கவலையும் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸை அன்புமணி நேரில் சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டவில்லை. பின்னர் சென்னை வந்த ராமதாஸ் அன்புமணியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பார்க்காமலே சென்றுவிட்டார்.
இந்த நிலையில், தைலாபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் ராமதாஸ் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது, எனக்கும், செயல் தலைவர் அன்புமணிக்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் பிரச்னை உங்கள் யாருக்கும் முழுமையாக தெரிய வாய்ப்பில்லை. பாமக பிரச்னையில் 2 சிறந்த ஆளுமைகள் மூலமாக சமரச பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அந்த பேச்சுவார்த்தை டிராவில் முடிந்துவிட்டது.
அதற்கு முன்பாக 16 பஞ்சாயத்துகள் நடந்தது. நான் தொடங்கிய 34 அமைப்புகளை சேர்ந்தவர்களே எனக்கு பஞ்சாயத்து செய்ய வந்தார்கள். அதை தலைவிதி என ஏற்றுக்கொண்டேன். பஞ்சாயத்து செய்த அனைவரும் ஒரே விதமான தீர்ப்பையே சொன்னார்கள். என்ன தீர்ப்பு என்றால் நான் இங்கே இருந்துக் கொண்டு கட்சி வளர்ப்பது, அவர் வெளியே சென்று கட்சி வளர்ப்பது என்பதுதான் அந்த தீர்ப்பு.
நீயா?, நானா? பார்த்துவிடுகிறேன்
அன்புமணிக்கு தலைவர் பதவியை விட்டுத்தர தயார் என கூறினேன். மாநாட்டிற்கு முன்பாக அன்புமணியை பார்த்துவிட்டு வாருங்கள், தலைவர் பதவியை விட்டுத்தருகிறேன் என கெளரவ தலைவரை அனுப்பினேன். மாநாடு மேட்டையிலேயே கையெழுத்து போட்டுதர தயாராக இருப்பதாக கூறினேன். அதனை அவர் நம்பவில்லை, ஏற்கவில்லை. அய்யாவை நம்ப முடியாது; எழுதிக் கொடுக்கச் சொல்லுங்கள் என்றார். எனக்குள் இருந்த கோவம் பொங்கி எழுந்து நீயா?, நானா? பார்த்துவிடுவோம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன் என்றார்.
அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும்
மாவட்ட செயலாளர்கள் வருகையை தடுத்து நிறுத்தி, என்னை மானபங்கம் செய்தார். அதிகாலை 3 மணி வரை நிர்வாகிகளிடம் தொலைப்பேசியில் பேசி போகாதே என சொல்லியுள்ளார். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து என்னை எடுக்கப்போகிறார் என பொய்யான தகவலை சொல்லியுள்ளார். இதனை மூர்கன், மூடன் தான் செய்வான். அன்று அமைதி காத்திருந்தால் அன்புமணிக்கு அதிகாரம் தானாக வந்திருக்கும் என்றார்.
தந்தைக்குப் பிறகே தனயன்
குருவை மிஞ்சிய சீடன் இருக்கலாம், தந்தையை மிஞ்சிய தனயன் கூடாது. இதுவே தர்மம். இதுவே சார்ஸ்த்திர சம்பிரதாயம் ஆகும். உயிருள்ள என்னை எல்லா வகையிலும் உதாசினம் செய்துவிட்டு என் உருவப் படத்தை வைத்து உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபினமாக்கி, என் பெயரில் நடைபயனம் செய்யப் போகிறார்களாம். இவை எல்லாம் நாடகமே. என் கைகளைக் கொண்டே என் கண்களை நான் குத்திக் கொண்டேன் என்றார்.
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை நானே பாமக தலைவராக நீடிப்பேன். பிறகு வேண்டுமானால் அவர் இருக்கட்டும். கூட்டணி குறித்து நான்தான் முடிவு செய்வேன் என்றவர் இன்னும் ஓரிரு ஆண்டுகள் தலைமையேற்க என உரிமை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்ற நினைத்தார் மேலும், பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு தில்லி செல்லும்போது, அப்பா கட்சியை நான் பார்த்துக் கொள்கிறேன் என அன்புமணி கூறினார். விமானத்தில் சென்னை திரும்பும்போது, தவறாக கூறியிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றார். அப்போது எனது கண்ணில் இருந்து 2 சொட்டு கண்ணீர் விட்டேன். 7 ஆண்டுகளுக்கு முன்பே கட்சியை கைப்பற்றும் எண்ணம் அவருக்கு இருந்திருக்கிறது.
நம் குடும்ப பெண்களுக்கு அரசியல் வேண்டாம்
நமது குடும்ப பெண்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று செளமியாவிடம் கூறினேன், மக்களவைத் தேர்தலின் போது என்னிடம் கெஞ்சி செளமியாவை வேட்பாளராக அறிவித்தார்கள் என்று கூறிய ராமதாஸ், செளமியா தன் பேச்சிற்கு எதிர்மாறாக செயல்பட்டதாகவும் விமர்சித்தார்.
அரசியலில் வாரிசு இல்லை
அரசியலில் வாரிசு இல்லை. யாரிடமும் கட்சியை ஒப்படைக்கலாம் என்று ராமதாஸ் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.