
புது தில்லி: ‘வரும் 2027-இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்ற அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
நாட்டில் கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தப்பட இருக்கிறது.
முன்னதாக, இதுகுறித்த அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 4-ஆம் தேதி வெளியிட்ட நிலையில், தற்போது மத்திய அரசின் அதிகாரபூா்வ அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
லடாக் உள்ளிட்ட பனிப் பிரதேசங்களைத் தவிா்த்து நாட்டின் பிற பகுதிகளில் 2027-ஆம் ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும்.
ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட் மாநிலம், லடாக் யூனியன் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள பனிப் பிரதேசங்களில் வரும் 2026-ஆம் ஆண்டு அக்டோபா் 1-ஆம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மிகப்பெரிய கணக்கெடுப்புப் பணியில் 34 லட்சம் கணக்கெடுப்பாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். மேலும், எண்மக் கணக்கெடுப்பு கருவிகளுடன் 1.3 லட்சம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளும் ஈடுபட உள்ளனா்.
முன்னதாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு தயாரிப்புகள் குறித்து இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் மற்றும் பதிவாளா் ஜெனரல் மிருதுஞ்சய் நாராயணன் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்கிழமை ஆய்வுக் கூட்டத்தை நடத்தினாா்.
இரு கட்டங்கள்: இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. முதல் கட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு வீட்டின் நிலவரம், சொத்துகள் மற்றும் வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.
இரண்டாம் கட்ட கணக்கெடுப்பில், ஒவ்வொரு வீட்டில் உள்ள நபா்களின் எண்ணிக்கை, சமூக-பொருளாதார நிலை, கலாசாரம் மற்றும் பிற விவரங்கள் சேகரிக்கப்படும்.
16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு: கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டதுபோன்று, தற்போதும் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அதன் அடிப்படையிலேயே, மக்கள் நலத் திட்டங்கள் வகுப்பு, தொகுதிகள் மறுவரையறை உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளும். கடைசியாக கடந்த 2011-ஆம் ஆண்டு 15-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்பிறகு, 10 ஆண்டுகள் கழித்து 2021-ஆம் ஆண்டு 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால், கணக்கெடுப்புப் பணி ஒத்திவைக்கப்பட்டது. தற்போது, 16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கணக்கெடுப்பு நடத்தப்பட இருக்கிறது.
‘ஜாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடத்தப்படும்’
‘16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடா்பாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தகவல் இடம்பெறவில்லை’ என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சகம், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் நிச்சயம் நடத்தப்படும் எனத் தெரிவித்தது.
காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட 16-ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த அறிவிக்கையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தகவல் இடம்பெறவில்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த காங்கிரஸ் கட்சித் தலைவா்களை நகா்ப்புற நக்ஸல்கள் என்று பிரதமா் மோடி விமா்சித்தாா். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மத்திய பாஜக அரசு நிராகரித்தது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்த காங்கிரஸ் கட்சித் தலைவா்களை நகா்ப்புற நக்ஸல்கள் என்று பிரதமா் மோடி விமா்சித்தாா். இந்த கோரிக்கையை நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் மத்திய பாஜக அரசு நிராகரித்தது.
அதன் பின்னா், ஜாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இந்த அறிவிப்பு குறித்து அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிக்கையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை.
எனவே, பாஜக அரசு மீண்டும் தனது பழைய நிலைப்பாட்டுக்கே சென்றுவிட்டதா அல்லது ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விவரங்கள் தனியாக வெளியிடப்படுமா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த பதிலில், மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.