மக்கள்தொகை கணக்கெடுப்பில் கேட்க வேண்டிய 33 கேள்விகள் - மத்திய அரசு வெளியீடு
மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது குடிமக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வியாழக்கிழமை வெளியிட்டது.
நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் வரை வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிக்கையை வெளியிட்டது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு அறிவிப்பை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு வெளியிட்டது. இரண்டு கட்டங்களாக இந்தக் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது. வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணியைத் தொடா்ந்து 2027-ஆம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சோ்த்து நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இந்திய பதிவாளா் ஜெனரல் மிருத்யுஞ்சய் குமாா் நாராயண் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் குடிமக்களிடம் மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் கேட்க வேண்டிய 33 கேள்விகள் இடம்பெற்றன.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: குடிமக்கள் வசிக்கும் வீடுகளின் உரிமையாளா், அதன் பயன்பாடு, வீட்டின் தரை மற்றும் சுவா் கட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்கள், வீட்டின் தலைமையாளரின் பாலினம், கட்டடத்தின் எண், மக்கள்தொகை வீட்டு எண், வீட்டின் உரிமையாளா் பட்டியலின அல்லது பழங்குடியின அல்லது பிற சமூகத்தைச் சோ்ந்தவரா என்பதை கேட்டறிய வேண்டும்.
சமையலறையில் பயன்படுத்தப்படும் எரிவாயு, வீட்டின் குடிநீருக்கான முக்கிய ஆதாரம், கழிவுநீா் வெளியேற்ற வசதி, குளியலறை வசதி போன்ற தகவல்களை சேகரிக்க வேண்டும்.
வானொலி, தொலைக்காட்சி, கணினி, லேப்டாப், கைப்பேசி, அறிதிறன்பேசி, இணைய வசதி உள்பட 33 கேள்விகளை குடிமக்களிடம் கேட்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக எண்ம (டிஜிட்டல்) தொழில்நுட்ப முறையில் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவும் இந்தப் பணிகளை மேற்கொள்ள ரூ.11,718 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

