தஞ்சாவூர் அருகே சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுப்பு

தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்யப்படும் சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழி
செங்கிப்பட்டி அருகே பாளையப்பட்டியில் கண்டெடுக்கப்பட்ட ஈமத் தாழி
Published on
Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்யப்படும் சங்க கால ஈமத் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே தெற்குப் பாளையப்பட்டியில் ‘தாழவாரி’ என்கிற பகுதியில் தாழி போன்ற பொருட்கள் கிடப்பதாக பாளையப்பட்டி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ரெ. கமலதாசன் கொடுத்த தகவலின் பேரில்,

மன்னர் சரபோசி அரசு கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியரும் கல்வெட்டு ஆய்வாளருமான சோ.கண்ணதாசன், பொந்தியாக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர் தில்லை கோவிந்தராசன், சரஸ்வதி மகால் நூலக விற்பனை எழுத்தர் நேரு (பணி ஓய்வு), முனைவர் பட்ட ஆய்வாளர் வீரமுத்து ஆகியோர் அடங்கிய குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில், இவை ஈமத் தாழிகள்‌ ஆகும். பண்டைய தமிழகத்தில் இறந்தவர்களின் உடல்களை வைத்து, மண்ணில் புதைக்கப் பயன்படுத்தப்பட்ட புதை கலன்களே ஈமத் தாழிகள் எனப்பட்டன. இது ஒரு சவ அடக்க முறையாகும். இந்த ஈமத் தாழிகளுக்கு முதுமக்கள் தாழி, முதுமக்கள் சாடி, ஈமப் பேழை, மதமதக்கா பானை என்ற வேறு பெயர்களும் உண்டு.

இந்த அடக்க முறை சங்க காலந்தொட்டே இருந்து வருகிறது. போர் செய்து இறந்திட்ட வீரர்களுக்கு எடுக்கப்பட்ட ஈமத் தாழியாக இருந்திருக்கக் கூடும். மேலும், வேலைபாடுகளுடன் கூடிய அகன்ற வாய்களைக் கொண்ட தாழிகளின் கழுத்துப் பகுதியில் சங்கிலி கோத்தது போன்ற அழகிய வேலைபாடுகளைக் கொண்டதாக 25-க்கும் மேற்பட்ட தாழிகள் மண் அரிப்பினால் சிதைந்து சிதறுண்டு வெளியே காணக் கிடக்கின்றன. இவற்றுள் இரும்பாலான பொருட்களின் எச்சங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் சிறிய அளவிலான ஈமத் தாழிகள் சிலவற்றுள் ஒன்றுக்கு மேற்பட்ட மட்கலயங்களும் காணப்பெறுவதால், போரில் இறந்தவர்களின் சடலத்தை எரியூட்டி, எஞ்சிய சாம்பலைச் சிறிய மட்கலயங்களில் இட்டுச் சிறிய அளவிலான ஈமத் தாழிகளில் வைத்துப் புதைத்திருக்க கூடும் என்பது தெரிய வருகின்றது.

அதுமட்டுமன்றி அகழாய்வு செய்ய முற்படும் போது, ஈமக் காட்டுப் பகுதி முழுமையும் அரசு புறம்போக்கு நிலமாக இருப்பதால், அரசு நிலத்தைக் கையகப்படுத்த வேண்டிய தேவை எழாது.

இதன் அடிப்படையில் ஈமக் காட்டினையும், வாழ்விடப் பகுதியாகக் கருதப்படும் இடத்தினையும், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்லியல் துறையோ, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையோ ஆய்வு மேற் கொண்டால், சோழ மண்டலத்துச் சங்க காலத் தொன்மை வரலாற்றையும், அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டினையும் வெளிக்கொணரலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இப்பகுதி மிகுந்த பண்பாட்டுத் தரவுகளைக் கொண்டதாகத் தமிழகத்தில் மற்றொரு கீழடியாக விளங்கிடவும் வாய்ப்புண்டு என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com