
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் காந்தி நகர் பகுதியில் புதன்கிழமை நள்ளிரவில் 3 பேர் மீது நாட்டு வெடி குண்டு வீசப்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயங்களுடன் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே பேரம்பாக்கம் காந்திநகர் பகுதியில் முகேஷ், தீபன், ஜாவித் ஆகிய 3 பேரும் பேசிக்கொண்டிருந்த போது திடீரென அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டை அவர்கள் மீது வீசியதில் முகேஷ்(25) சம்பவ இடத்திலே சுருண்டு விழுந்தார். மேலும் அந்த கும்பல் மற்ற இருவரையும் கத்தியால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். இதில் தீபன் என்பவரின் கையில் வெடிகுண்டு பட்டதில் பலத்த காயம் ஏற்ப்பட்டது. மற்றொருவருக்கு தலையில் வெட்டு காயங்கள் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அவசர வாகனம் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முகேஷ் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கை தோள்பட்டை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த தீபன் என்பவரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து குறித்து மப்பேடு காவல் நிலைய போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டு வெடிகுண்டு வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த முகேஷ் வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்துள்ளார். இவரது தம்பி ஜீவா.
இந்நிலையில், ஜீவா, இவரது நண்பர் சின்ன மண்டலி கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் . இருவரும் கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை அண்ணன் முகேஷ் தட்டிக்கேட்டுள்ளார். மேலும், ஆகாஷுடன் சேரவிடாமல் ஜீவாவை தன்னுடன் சிலிண்டர் போடும் பணிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் பேரம்பாக்கத்தில் நின்று பேசிக் கொண்டிருந்த முகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தீபன், ஜாவித் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் 3 நாட்டு வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர்.
இதில், முகேஷ் உடல் முழுதும் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
மேலும், கடந்த சில நாள்களுக்கு முன்பு முகேஷ்க்கும், ஆகாஷிற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆகாஷ் காதை வெட்டியது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ் பழிக்கு பழியாக முகேஷை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
ஆகாஷ் காதை வெட்டிய சம்பவத்தில் ஜீவா உள்ளிட்ட இரண்டு பேரை ஏற்கனவே காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தகவல் அறிந்து சம்பவ இடத்தில் திருவள்ளூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, மப்பேடு உதவி ஆய்வாளர் மாலா தலைமையிலான காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதோடு சம்பவ இடத்தில் உயிரிழந்த முகேஷ் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி, மோப்ப நாய் நிக்கி, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
Summary
A bomb was thrown at a brother who had complained about his younger brother becoming addicted to cannabis near Perambakkam in Thiruvallur district, killing him and seriously injuring two others.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.