
சட்டவிரோத சுரங்க வழக்கிலிருந்து கோவா சுற்றுலாத் துறை அமைச்சரை பெங்களூர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையிலான விசாரணை குழு சமர்பித்த அறிக்கையில் கோவா மாநிலத்திலுள்ள 90 இரும்பு தாது சுரங்கங்களும் முறையான சுற்றுச்சூழல் அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதுடன் அதன் மூலம் அரசுக்கு 5 ஆண்டுகளில் சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான பணம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, 2012 செப்டமபரில் அம்மாநில அதிகாரிகள் அனைத்து சுரங்கங்களையும் மூட உத்தரவிட்டனர். ஆனால், 2015 ஆம் ஆண்டு கோவா அரசு 88 சுரங்கங்களின் குத்தகையை புதுப்பித்து அனுமதியளித்தது.
இந்த விவகாரம் கடுமையான சட்ட ரீதியான எதிர்ப்புகளை உண்டாக்கியதுடன் பல்வேறு குற்றசாட்டுக்களையும் எழுப்பியது. அதனால், கடந்த 2018 ஆம் ஆண்டு அந்த குத்தகைகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றம் ரத்து செய்து, புதிய குத்தகைகள் வெளிப்படையான முறையில் வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது.
இதையும் படிக்க: திருச்சி - யாழ்ப்பாணம் இடையே நேரடி விமான சேவை துவக்கம்!
இந்த வழக்கில் அப்போது கோவா மாநிலத்தின் சுரங்கம் மற்றும் புவியியல் துறை அமைச்சராக இருந்த ரோஹன் கௌண்டே மீது சட்டவிரோதமான முறையில் சுரங்கம் தோண்டவும் அதனை போக்குவரத்து செய்யவும் அனுமதித்தாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இது தொடர்பான விரிவான ஆதாரங்களும் சாட்சியங்களும் பல மாதங்களாக ஆராயப்பட்டதாகவும் கௌவுன்டே அனைத்து தேவையான நடைமுறைகளையும் கடைப்பிடித்ததாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியாக உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் தரப்பில் வாதிடப்பட்டது.
ஆனால், அரசு தரப்பில் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த சுரங்க விவகாரத்தில் அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தியதுடன் சுற்றுச்சூழல் மாசுப்பாடு ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குறிப்பிட்ட காலத்தில் சுரங்கத் துறையில் முறைக்கேடு நடந்திருந்தாலும் அதற்கு கௌண்டே தான் முழு காரணம் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் அரசு தரப்பில் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கிலிருந்து தற்போதைய கோவா மாநில சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ள ரோஹன் கௌண்டே விடுவிக்கப்பட்டுள்ளார்.