ஆப்கனில் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும்: ஐ.நா. கண்டனம்

ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மீதான தலிபான்களின் தடைக்கு ஐ.நா. அவை கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...
ஆப்கன் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆப்கன் பெண் கல்வி மீதான தடை தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
Published on
Updated on
2 min read

ஆப்கானிஸ்தான் நாட்டில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் விதித்துள்ள தடையானது தலைமுறைகளைக் கடந்து பாதிக்கும் என ஐக்கிய நாடுகளின் பெண்கள் அவை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டில் புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில் நடுநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி பயில அந்நாட்டு பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையானது தற்போது வரை விலக்கப்படவில்லை. இதனால், மேலும் ஓர் ஆண்டு ஆப்கன் பெண்கள் கல்வி கற்க முடியாத சூழலிலுள்ளனர்.

இதுகுறித்து ஐ.நா. பெண்கள் ஆணையத்தின் செயல் இயக்குநர் சீமா பஹோஸ் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஆப்கான் சிறுமிகள் தற்போது துவங்கியுள்ள புதிய கல்வியாண்டில் பள்ளிகளுக்கு திரும்பி தங்களது கல்வியைத் துவங்க வேண்டுமெனவும் அவர்களது கல்வி மறுக்கப்படுவது என்பது அவர்களது தனிமனித உரிமைகளை மீறுவதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஐ.நா. பெண்களின் அறிக்கையில் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான கல்வியை தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வரும் கட்டுப்பாடுகளின் மூலம் தலிபான்கள் முழுவதுமாகத் தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2022 மார்ச் மாதம் ஆப்கன் சிறுமிகள் நடுநிலை கல்வியானது தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அவ்வாண்டு (2022) டிசம்பரில் பல்கலைக்கழகங்களிலிலும் பெண்கள் கல்வி பயிலத் தடை விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் சில மாகாணங்களில் ஆண்களை விட பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் அதிகம் பங்கேற்று வந்த நிலையில், கடந்த 2023 ஜனவரியில் ஆப்கன் பெண்கள், பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்கு தலிபான் அரசு தடை விதித்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு வெளியான ஐ.நா. பெண்கள் அறிக்கையில், நடுநிலைக் கல்வி கற்க வேண்டிய 1.1 மில்லியன் ஆப்கன் சிறுமிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அந்நாட்டில் துவக்கப் பள்ளிகளில் பெண்கள் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டாலும் சமூக விதிமுறைகள், அணுகல் சிக்கல்கள் மற்றும் பாதுகாப்பு காரணங்களினால் அவர்கள் பள்ளிகளில் சேர்வது குறைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி மீதான தடை நீடித்தால் வருகின்ற 2066 ஆம் ஆண்டிற்குள் ஆப்கானிஸ்தானின் பொருளாதாரமானது 9.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நஷ்டத்தை சந்திக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில், பெண் கல்வி மீதான தலிபான் அரசின் தடையைக் கண்டித்து அந்நாட்டின் பெண் ஆர்வலர்கள் ‘லெட்ஸ் ஸ்டடி’ எனும் கல்வி கற்பதற்கு ஊக்குவிக்கும் பிரச்சாரத்தைத் துவங்கியுள்ளனர். இந்த பிரச்சாரத்திற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டுமெனவும் தற்போது துவங்கியுள்ள கல்வியாண்டில் மற்றொரு 4 லட்சம் ஆப்கன் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தடைகள் மற்றும் பெண்களுக்கான அடிப்படை உரிமைகள் மறுகப்படுவது குறித்து யூனிசெஃப் ஆணையத்தின் செயல் இயக்குநர் கேத்திரின் ரஸ்ஸல் கூறுகையில், ஆப்கானிஸ்தானில் பெண்களின் இந்த நிலையானது பேரழிவைத் தரக்கூடியது எனவும் இது அந்நாட்டின் எதிர் காலத்தையும் மற்றும் சுகாதாரம், பொருளாதாரம் போன்ற துறைகளை மிகப் பெரியளவில் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எலான் மஸ்க் பரிதாபத்திற்குரியவர்: மகள் ஜென்னா கருத்து!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com