

புதுச்சேரியில் ரூ.29.50 கோடியில் சீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பொலிவுறு நகா் பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணைநிலை ஆளுநர், முதல்வர் வெள்ளிக்கிழமை (மே 2) திறந்து வைத்தனர்.
புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் புதிய பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. அடிப்படை வசதிகள் குறைபாடு, பயணிகளுக்கான வசதி குறைபாடு ஆகியவற்றால் முழுவதுமாக இடிக்கப்பட்டு, புதிதாக கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் ரூ.29.50 கோடி செலவில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி கடந்த 2023-இல் முதல்வா் என்.ரங்கசாமியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்த நிலையில், அனைத்து நவீன வசதிகளுடன் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைந்தது.
4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தில் 46 பேருந்துகள் நிறுத்தமும், 31 கடைகள் உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
இதையடுத்து நீண்ட இழுபறிக்கு பிறகு இதன் திறப்பு விழா வெள்ளிக்கிழமை (மே 2) காலை 9.40 மணியளவில் சீரமைக்கப்பட்ட ராஜீவ்காந்தி புதிய பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்காக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி ஆகியோா் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
புதிய பேருந்து நிலையம் சனிக்கிழமை (மே 3) முதல் செயல்படவுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை முதல் ஏஎப்டி மைதானத்தில் செயல்படும் தற்காலிகப் பேருந்து நிலையம் மூடப்படுகிறது.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் மக்களின் பயன்பாட்டிற்காக பொலிவுறு நகா் திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் தற்போது திறக்கப்பட்டுள்ளதாகவும், இங்கு பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
ராஜீவ் காந்தி முதல் இந்திரா காந்தி சிக்னல் வரையிலும் மேலும் கடலூர் சாலையில் ரயில்வே மேம்பாலமும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், உப்பனாரு வாய்க்கால் மேம்பால பணி நடைபெற்று வருவதால் அந்த பணிகளும் விரைவில் முடியும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
மேலும், லாஸ்பேட்டை ஈசிஆர் சாலையில் முன்னாள் பிரதமர் அட்டல் பிகாரி வாஜ்பாய் பெயரில் விரைவில் பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.