குடியரசுத் தலைவரின் குறிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஆளுநரின் வழக்கு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்
Published on
Updated on
2 min read

அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் அனுப்பப்படும் மசோதாக்களுக்கு அவா் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாகவும் தமிழகத்தின் மூன்று பல்கலைக்கழகங்களில் துணை வேந்தா்களின் நியமன விவகாரத்தில் ஆளுநரின் தலையீடு அதிகரிப்பதாகவும் கூறி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடா்ந்தது.

வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்து ஏப்ரல் 8 ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

மேலும், இந்தத் தனிப்பட்ட வழக்குடன், சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசம் குறித்தும், காலக்கெடுவுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால் அதற்கான சரியான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட மாநில அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அரசியலமைப்பின் 201-வது பிரிவின் கீழ், குடியரசுத் தலைவரின் முடிவுக்கு எந்த காலக்கெடுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் ஆளுநர் வழக்கில் மாநில மசோதாக்கள் குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், உச்சநீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143-ன் கீழ் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்ச நீதிமன்றத்தால் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகளுக்கு கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார்.

இதனிடையே, ஆளுநர் வழக்கு விகாரத்தில் உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் 14 கேள்விகளை எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டிருப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்த்துவைத்த பிரச்னையை மீண்டும் தூண்டுவது கண்டனத்துக்குரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் வலைதள் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கிலும், அதுபோன்ற பிற நிகழ்வுகளிலும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்து முடித்து வைத்துள்ள விவகாரத்தில், அந்த அரசியலமைப்பு நிலைப்பாட்டை நிலைகுலைக்கும் விதத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதன் மூலமாக, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் மக்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சிறுமைப்படுத்தும் வகையில் நடந்துகொண்டார் என்பது அம்பலமாகியுள்ளது.

இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசின் முகவர்களான ஆளுநர்களின் கட்டுப்பாட்டில் வைத்து அவற்றை பலவீனப்படுத்தும் முயற்சியே அன்றி வேறில்லை. மேலும், இது சட்டத்தின் மாட்சிமைக்கும், அரசியலமைப்புச் சட்டத்தைப் பொருள்கொள்வதில் இறுதித் தீர்ப்பளிக்கும் உரிமைகொண்ட உச்ச நீதிமன்றத்துக்கும் நேரடியாகச் சவால் விடுகிறது.

* ஆளுநர்கள் முடிவெடுக்கக் காலநிர்ணயம் செய்யப்படுவதில் எதற்கு எதிர்ப்பு இருக்க வேண்டும்?

* சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலவரையற்ற தாமதத்தை அனுமதிப்பதின் வழியாக, ஆளுநர்களின் முட்டுக்கட்டையை பாஜக சட்டபூர்வமாக்க முயல்கிறதா?

* பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டப்பேரவைகளை மத்திய அரசு முடக்க எண்ணுகிறதா?

மிக முக்கியமான கட்டத்தில் நமது நாடு நிற்கிறது. உச்ச நீதிமன்றத்தின் விளக்கம் கோரி எழுப்பப்பட்டுள்ள வினாக்கள் அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களைப் பகிர்ந்தளித்துள்ளதன் அடிப்படையையே சீர்குலைக்கவும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலச் சட்டப்பேரவைகளைத் திறனற்றதாக்கவும் நினைக்கும் மத்திய பாஜக அரசின் தீய எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆகையால், மாநில சுயாட்சிக்கே இது உடனடி ஆபத்தை உருவாக்கியுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில், பாஜக அல்லாத அனைத்து மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான சட்டப் போராட்டத்தில் இணையுமாறு வலியுறுத்துகிறேன்.

நம் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம்!

தமிழ்நாடு போராடும் , தமிழ்நாடு வெல்லும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com