

பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத விஜய் தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 27 இல் கரூர் நகரில் குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 பேர் பலியானதற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய தவெக தலைவர் விஜய், தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
பல மணி நேரம் கால தாமதமாக அவர் கரூருக்கு வந்ததும், பெருமளவு மக்கள் கூடியிருந்த இடத்தில் பாதுகாப்புக்குரிய எந்த ஏற்பாடுகளையும் அவரும், அவரது கட்சியினரும் செய்யாமல், குடிதண்ணீர் வசதியோ, மருத்துவ வசதியோ செய்யாமல் அந்தக் கூட்டத்தில் சினிமா டயலாக்குகளை உதிர்த்தார்.
தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே எந்தத் தலைவருடைய நிகழ்ச்சியிலும் இப்படிப்பட்ட கொடும் துயரம் நேர்ந்தது இல்லை.
பெண்களும், குழந்தைகளும், கூட்டத்திற்கு வந்த பலரும் மடிந்துவிட்டார்கள் என்று அறிந்த பின்னரும் கூட அவர் சென்னையை நோக்கி விரைந்து வந்துவிட்டார். திருச்சி மாநகரிலேயே அந்த இரவில் தங்கியிருக்கலாம். மறுநாள் உயிரற்றவர்களின் சடலங்களுக்கு மரியாதை செய்து, அந்தக் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்திருக்கலாம்.
ஒரே ஓட்டமாக சென்னைக்கு வந்தவர், இரண்டு நாள் கழித்தாவது உயிரிழந்தோரின் இல்லங்களுக்குச் சென்று அனுதாபம் தெரிவித்திருக்கலாம். ஆனால் ஒரு மாதம் கடந்த பின்னர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் தனது போலி பச்சாதாபத்தைக் காட்டியுள்ளார்.
நடந்த சம்பவத்திற்கு துளியளவும் வருத்தப்படாமல், குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக மிக தவறான போக்காகும். முதல்வர் ஸ்டாலின் செய்தி அறிந்ததும் அமைச்சர்களையும், கட்சி முன்னணியினரையும் உடனே கரூரில் மருத்துவமனைகளுக்கும், உயிர் பலியானோரின் இல்லங்களுக்கும் அனுப்பி வைத்ததோடு, மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை உயர் அதிகாரிகள் அனைவருக்கும் ஆணை பிறப்பித்து விட்டு, இரவோடு இரவாக கரூருக்கே சென்று உயிர்நீத்தோரின் சடலங்களுக்கு மலர் வளையம் வைத்து, பெற்றோர், உற்றார் உறவினர்களிடம் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து தான் முதல்வர் என்பதை உணர்த்திக் காட்டினார்.
சட்டப்பேரவையில் கரூர் கூட்ட நெரிசல் பலிக்குக் காரணமானவர் பெயரையோ, அவரது கட்சியினர் பெயரையோகூட முதல்வர் உச்சரிக்கவே இல்லை. இப்படிப்பட்ட கூட்டங்களை ஏற்பாடு செய்கின்றவர்கள், மக்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற வகையில்தான் முதல்வர் பேசினார்.
ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக காவல்துறை தூத்துக்குடியில் படுகொலை நிகழ்த்திய இரவிலேயே துயர்ப்பட்ட அத்தனை இல்லங்களுக்கும் சென்றவன் என்ற முறையில், கரூர் சம்பவத்தால் நான் துடி துடித்துப் போனாலும், என் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த காரணத்தால் நான் கரூருக்குச் செல்ல இயலாமல் போனது. எங்கள் கட்சியின் முதன்மைச் செயலாளர் உடனே கரூருக்கு விரைந்தார்.
கரூரில் டயலாக்கை எடுத்து விடும்போதே, காவல்துறைக்குத்தான் முதலில் பாராட்டும், நன்றியும் தெரிவித்தார் என்பதையும் நினைவூட்டுகிறேன்.
பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத இந்த விஜய், தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.
75 ஆண்டுகளை, ஆம் முக்கால் நூற்றாண்டை கண்ணீரிலும், வியர்வையிலும், கொட்டிய குருதியிலும், சிறைச்சாலைகளிலும் கடந்து வந்த தியாகிகள் கோட்டையாம் திமுகவை சற்றும் மான வெட்கமின்றி எள்ளி நகையாட முனைகின்ற அவரது நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும்.
இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.