பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி: தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு

பிகாரில் செய்தது போல, தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள், அதில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் இரண்டு நிறுவனங்களாக கூட்டு சேர்ந்து சதி செய்து வருகிறார்கள்...
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
Published on
Updated on
3 min read

சென்னை: பிகாரில் செய்தது போல, தமிழகத்திலும் செய்ய நினைக்கிறார்கள், அதில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் இரண்டு நிறுவனங்களாக கூட்டு சேர்ந்து சதி செய்து வருகிறார்கள் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகின்ற 24 ஆம் தேதி விசிக சார்பாக சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தார்.

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுடன் பேசினார். உடன் விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

முன்னதாக, துபை அபுதாபியில் நடைபெற உள்ள குத்து சண்டை போட்டியில் பங்குபெற உள்ள இரண்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ. 75 ஆயிரம் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில், பிகாரின் தேர்தல் முடிவு யாரும் எதிர்பாக்காத ஒன்று, இது குறித்து எதிரும், புதிருமான விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை என மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மை கேள்வி குறியாகி உள்ளது. பாஜக மற்றும் தேர்தல் ஆணையம் என இரண்டு நிறுவனங்களும் கூட்டு சேர்ந்து கொண்டு வந்த சதியாக எஸ்.ஐ.ஆர் திட்டத்தை கொண்டு வந்து உள்ளனர் என கூறினார்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கைவிட வேண்டும் என விசிக தொடரந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு காரணம் மிக குறுகிய காலம் மட்டுமே உள்ளது.

குறுகிய காலத்தில் வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பது சவாலாக உள்ளது. கேரளத்தில் இந்த பணிகளை மேற்கொண்ட அதிகாரி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்திலும் அதற்கு எதிர்ப்பு உள்ளது.

குறுகிய காலத்தில் எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ள முடியாது என வருவாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை கண்டித்து வருகின்ற 24 ஆம் தேதி விசிக சார்பாக சென்னையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது.

பொதுவாக சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக எப்போதும் மேற்கொள்ளும் முறைகளில் ஏன் இப்போது வாக்காளர் திருத்த பணிகளை மேற்கொள்ள வில்லை என கேள்வி எழுப்பினார்.

2005 ஆம் ஆண்டு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளை மேற்கொண்டதாக ஆதாரம் இல்லை. தமிழகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ள மிக குறுகிய காலமே உள்ளதால் நடைமுறையில் அதற்கான சாத்தியம் இல்லை எனவும் தெரிந்தும் உள்நோக்கத்தோடு இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார்.

எதிர்ப்பு வாக்குகளை வாக்களிக்கவிடாமல் தடுக்கும் வகையில் உள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல அவர்களுக்கு எதிரான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தான் இந்த பணிகள் உள்ளது என குற்றம்சாட்டினார்.

பாஜகவும் தேர்தல் ஆணையம் கூட்டாக இந்த சதியை செய்து வருகிறார்கள். குடியிரிமை சட்டத்தை மறைமுகமாக கொண்டுவருவதற்காக இதனை மேற்கொண்டு வருகிறார்கள் என கூறினார்.

எஸ்ஐஆர் வேண்டாம் என தான் விசிக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நடைமுறை சிக்கல்களை கூறி வருவாய்த் துறை அதிகாரிகள் அதனை புறகணித்துள்ளனர். அதற்கு மதிப்பு அளிக்க வேண்டும்.

மக்களுக்கு எதிரான விரோத போக்கை அதிகாரிகள் வேடிக்கை பார்க்க முடியாது. கேரளத்தில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர் ஒருவர் மன அழுத்ததில் உயிரிழந்ததிற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பு ஏற்க வேண்டும் என கூறினார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த பிறகு எஸ்ஐஆர் பணிகளை மேற்கொள்ளலாமே எனவும், தேர்தலுக்கு முன்னதாக எப்போது இருக்கும் நடைமுறையே பின்பற்றலாம் என கூறினார். கொளத்தூர் தொகுதிகளில் போலி வாக்காளர்கள் இருந்தால் அதனை பாஜக கண்டுபிடிக்கட்டும்.

எஸ்ஐஆர் குறித்து தவெக நடத்திய போராட்டம் குறித்தான கேள்விக்கு... தமிழக வெற்றிக் கழகம் இன்னும் அரசியல் களத்திற்கு முழுவதும் வரவில்லை எனவும், முறையாக இதனை தவெக அணுக வேண்டும் என தெரிவித்தார்.

தவெக கருத்து முரணாக உள்ளது

தவெக தலைவர் விஜய் எஸ்ஐஆர் குறித்து பேசி விடியோவில் பாஜகவை பற்றி பேசவில்லை. திமுக வெறுப்பு, திமுக எதிர்ப்பு மட்டுமே விஜய்க்கு தெரியும் என விமரிசனம் செய்தார்.

இரண்டு நாட்களுக்கு முன்னதாக இலங்கை யாழ்பாணம் சென்றேன். அங்கு நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டேன். வடமாகண சபையின் முதல்வர் விக்னேஷ் உள்ளிட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதற்கு பிறகு தமிழ் தேசிய மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதில் இலங்கையின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர். இலங்கையில் புதிய அரசமைப்பு சட்டத்தை உருவாக்க உள்ளார்கள். அதற்கான சட்டங்கள் தயாராகி வருகிறது

ஈழ தமிழர்களுக்கு இந்த புதிய அரசமைப்பில் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்க வேண்டும். அதற்கு இந்திய அரசு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையில் ஈழ தமிழர்களுக்கு ராஜூவ் காந்தி பிரதமாக இருந்த போது கொண்டு வந்த 13 ஆவது திருத்ததில் எங்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால் அது அவர்களுக்கு கூடுதல் அதிகாரத்தை கொடுக்கும். எனவே அதனை கொண்டு வர மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இந்தியா- இலங்கை ஒப்பந்ததை ஏற்கிறோம். அதில் 13 ஆவது ஒப்பந்தததை ஏற்க வில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். பிரதமரும், தமிழக முதல்வரும் இந்த விஷயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு கருவியாக புத்தரை பயன்படுத்தி வருகிறார்கள். சிங்கள பௌத்தர்களின் இந்த போக்கை விசிக கண்டிகிறது.

தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும் என தொடக்கத்திலே கூறினோம். மீண்டும் முதல்வரை சந்தித்து அவர்கள் விஷயத்தில் நல்ல முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்துவேன்.

மக்கள் விழிப்போடு இருந்து தடுக்க வேண்டும்

பிகாரில் செய்தது போல் தமிழகத்தில் செய்ய நினைக்கிறார்கள். தில்லுமுல்லு செய்து வாக்கை பெற்று ஆட்சியை பிடிக்க நினைக்கிறார்கள். அதனை ஜனநாயக சக்திகள் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். மக்கள் அதற்கு தயாராக வேண்டும் என்பது தான் எங்களது அறைகூவல். வாக்குப் பதிவு சதவீதத்தை உயர்த்துவது மட்டுமே அவர்களது நோக்கம் இல்லை. அவர்களுக்கு எந்தவிதமான வாக்கு வங்கி ஆதாரமும் இல்லாத நிலையில், வலிமையில்லாத நிலையில் தமிழ்நாட்டிலும் ஆட்சியை பிடிப்போம் என்ற எந்த துணிச்சலில் பிரதமர் வரையில் பேசுகிறார்கள். அப்படி அவர்கள் பேசுவதிலே உள்நோக்கம், சதிதிட்டம் இருக்குகிறது என்பதை யூகிக்க முடிகிறது. தமிழ்நாட்டு மக்கள் எச்சரிக்கையாகவும் விழிப்போடு இருக்க வேண்டும் . அவர்களது தில்லுமுல்லு நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அரசியல் கட்சி எதிர்ப்பு என்றால் அது அரசியல் காரணம் என்று விமரிசனம் செய்யப்படலாம். இதில் மக்கள் விழிப்போடு இருந்து தடுக்க வேண்டும் என திருமாவளவன் வேண்டுகோள் விடுத்தார்.

Summary

BJP and Election Commission are conspiring together Thirumavalavan alleges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com