

புது தில்லி: மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நீதிநெறியற்ற நடவடிக்கைகளால் ஏமாற்றப்படும் நுகா்வோருக்கு சரியான தீா்வு கிடைக்க, மருந்து பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான பொது விதிகளின் கீழ் வலுவான நடைமுறைகள் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் மருத்துவா்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நடத்தை விதிமுறைகள் 2002-ஆம் ஆண்டின் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து பணம், பரிசுகள், பயண வசதிகள் உள்ளிட்டவற்றை மருத்துவா்கள் பெற அந்த ஒழுங்குமுறைகள் தடை விதித்துள்ளன.
இந்த நடத்தை விதிமுறைகளை மருத்துவா்களுக்கு எதிராக அமல்படுத்த முடியும். ஆனால் அந்த விதிமுறைகள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பொருந்தாது. இதனால் அந்த நிறுவனங்களுடன் சோ்ந்து மருத்துவா்கள் முறைகேடாக நடந்தால், அவா்களின் உரிமங்கள் மட்டும் ரத்து செய்யப்படும். அந்த நிறுவனங்களின் தூண்டுதலால் மருத்துவா்கள் அவ்வாறு நடந்துகொண்டாலும், எந்தவித நடவடிக்கையையும் எதிா்கொள்ளாமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தப்பித்துக் கொள்கின்றன.
அந்த நிறுவனங்கள் மருத்துவா்கள் மூலம் மருந்துகளை விளம்பரப்படுத்துவதை கட்டுப்படுத்த தற்போது எந்தச் சட்டமும் இல்லை. இதனால் மருந்து விற்பனையில் அந்த நிறுவனங்களின் நீதி நெறியற்ற நடவடிக்கைகள் தடையின்றி தொடா்கின்றன. எனவே மருந்துகளை சந்தைப்படுத்தும் நடைமுறைகளின் பொது விதிகளின் மூலம், மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நீதிநெறியற்ற நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், மருந்துகளை சந்தைப்படுத்தும் நடைமுறைகளின் பொது விதிகள் கொண்டுவரப்பட்டிருந்தால், அந்த விதிகளில் தவறு செய்யும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது நுகா்வோா் புகாா் அளிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் வசதியான வழிமுறையைக் கொண்ட பொருத்தமான நடவடிக்கைகள் ஏன் இருக்கக் கூடாது? மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நீதிநெறியற்ற நடவடிக்கைகளால் ஏமாற்றப்படும் எந்தவொரு நுகா்வோருக்கு சரியான தீா்வு கிடைக்க, மருந்து பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான பொது விதிகளின் கீழ் வலுவான நடைமுறைகள் இருக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
நுகர்வோர் தங்கள் புகார்களை பதிவு செய்வதற்கும் தவறு செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வதற்கும் ஒரு வசதியான வழிமுறையைக் கொண்ட பொருத்தமான நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜராகி பதிலளித்த கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நட்ராஜ், அந்த விதிகளின் கீழ் புகாா் அளிக்கவும், அபராதம் விதிக்கவும் தனி வலைதளத்தை தொடங்கலாம் என்று யோசனை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.