

இலங்கை பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று 'டிட்வா' புயலாக வியாழக்கிழமை உருவானது. இந்தப் புயல் வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
புயல் காரணமாக, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ. 28) அதி மழைக்கான 'சிவப்பு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு இலங்கை - இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது, வியாழக்கிழமை (நவ. 27) அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய இலங்கை பகுதிகளில் வியாழக்கிழமை(நவ. 27) முற்பகல் டிட்வா புயலாக வலுப்பெற்றது.
இதைத் தொடர்ந்து, வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வடதமிழகம் புதுவை மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரத் தொடங்கியது. இதனால், தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை (நவ.28) முதல் டிச. 3- ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 6 மணி நேரத்தில் 7 கி.மீ. வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் டிட்வா புயல், தற்போது புதுவையிலிருந்து தெற்கு - தென்கிழக்கே 440 கி.மீ.தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு- தென்கிழக்கே 540 கி.மீ. தொலைவிலும் நகர்ந்து வருகிறது.
இது ஞாயிற்றுக்கிழமை (நவ. 30) அதிகாலை வட தமிழ்நாடு, புதுச்சேரி, அதையொட்டிய தெற்கு ஆந்திரம் கடற்கரைகளுக்கு அருகில் தென்மேற்கு வங்கக்கடலை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.