

பிரபல பாடகர் ஜுபின் கர்க் (52) மரண வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதானவர்களை புதன்கிழமை சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் போராட்டம் வெடித்தது.
கைதுசெய்யப்பட்டவர்கள் பயணித்த வாகனத்தின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதையடுத்து ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் காவல் துறை தடியடி நடத்தியது.
இதனால் அஸ்ஸாமின் சில பகுதிகளில் பதற்றமான சூழல் தொடரும் நிலையில், காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாமைச் சேர்ந்த பாடகர் ஜுபின் கர்க் கடந்த மாதம் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அங்குள்ள கடலில் நீச்சல் அடித்துக்கொண்டிருந்தபோது அவர் உயிரிழந்ததார். ஆனால் அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஜுபின் கர்க் மரண வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. முதல்கட்டமாக வடகிழக்கு இந்திய திருவிழா ஏற்பாட்டாளர் ஷியாம்கனு மஹந்தா, ஜுபின் கர்கின் மேலாளர் சித்தார்த் ஷர்மா ஆகிய இருவரும் அக்.1-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டனர். சிங்கப்பூருக்கு ஜுபின் கர்கை அழைத்துச்சென்ற காவல் துறை அதிகாரியும் அவரது உறவினருமான சந்தீபன் கர்க் அக்.8-ஆம் தேதியும், ஜுபின் கர்கின் பாதுகாவலர்கள் நந்தேஷ்வர் போரா மற்றும் பரீஷ் பைசியா ஆகியோர் அக்.10-ஆம் தேதியும் கைதுசெய்யப்பட்டனர்.
5 பேரின் விசாரணைக் காலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்ததால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம் குறைவான கைதிகள் இருக்கும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டுள்ள 5 பேரையும் முஸல்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்சா சிறையில் அடைக்க அரசு முடிவுசெய்தது. அதன்படி 5 பேரையும் காவல் துறையின் வாகனத்தில் காவலர்கள் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.
அப்போது சிறைக்கு வெளியே கூடியிருந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினரின் வாகனத்தின் மீது கற்களை வீசத் தொடங்கினர். இதனால் பதற்றமான சூழல் ஏற்படத் தொடங்கியவுடன் உடனடியாக ரப்பர் குண்டுகளால் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர்.
சிறை வளாகத்தைச் சுற்றி காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.