

திருச்சி அருகே சிறுகனூரில் அமையும் 'பெரியார் உலக'த்துக்கு ரூ. 1.70 கோடி நிதியை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
தந்தை பெரியாரின் சமூகப் புரட்சிக்கான செயல்பாடுகளைப் போற்றும் வகையிலும் அவரது கொள்கைகளை உலகெங்கும் பரப்பும் வகையிலும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையையொட்டி திருச்சியிலிருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் உள்ள சிறுகனூரில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் 'பெரியார் உலகம்' உருவாகி வருகிறது.
இதன் மையப் பகுதியில் 60 அடி பீடத்தின் மீது 95 அடி உயர சிலையுடன் தரையிலிருந்து மொத்தம் 155 அடி உயரத்தில் பெரியாரின் பேருருவச் சிலை காட்சியளிக்கும். சமத்துவத்திற்காகவும் சமூகநீதிக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் பெருஞ்சிறப்புகளை உலக அரங்குகளில் எதிரொலிக்கும் ஒரு நினைவுச் சின்னமாக இது இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெரியார் படைப்புகள் அடங்கிய நூலகம், பூங்கா, கலையரங்கம் என பிரமாண்டமாக அமைந்து வருகிறது.
இதற்கு பல்வேறு அமைப்பினரும் நிதி அளித்து வரும் நிலையில் திமுக சார்பில் அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ரூ. 1.70 கோடிக்கான காசோலையை திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
இதுபற்றி முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"தமிழுலகம் பகுத்தறிவும் சுயமரியாதையும் பெற உழைத்திட்ட தந்தை பெரியாரின் புகழ் சொல்லும் வகையில் திருச்சி - சிறுகனூரில் அமையும் “பெரியார் உலக”த்துக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒருமாத ஊதியமான ரூ. 1,70,20,000-ஐ திராவிடக் கழகத் தலைவர் கி. வீரமணியிடம் வழங்கினேன்! பெரியார் எனும் பெருநெருப்பின் பேரொளியில் தமிழினம் தலைநிமிர்ந்து நடைபோடும்!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.