

மேட்டூர் அணை கடந்த 11 நாள்களாக நிரம்பிய நிலையில் உள்ளது. மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் தொடர்ந்து வந்த உபரிநீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக நீர்வரத்து சரிந்து வந்ததையடுத்து உபரிநீர் போக்கியான 16 கண்பால வழியாக திறக்கப்பட்டு வந்த உபரிநீர் இரு நாள்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
உபரிநீர் போக்கி மூடப்பட்டதால் உபரிநீர் கால்வாயில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போல காணப்படுகிறது. இந்தப் பகுதியில் வியாழக்கிழமை காலை லட்சகணக்கில் மீன்கள் செத்து மிதக்கின்றன. அரஞ்சான் வகை மீன்கள் ஏராளமாக செத்து மிதப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதியில் சாக்கடை நீரின் வாடை வீசுகிறது. கர்நாடக கழிவுநீர் நீரில் கலந்து வந்ததால் மீன்கள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது அல்லது யாரேனும் குட்டைகளில் மீன் பிடிப்பதற்காக தோட்டா வீசினார்களா? விஷம் கலந்தார்களா என்பது மர்மமாக உள்ளது.
அடிக்கடி மேட்டூர் அணையின் உபரி நீர் கால்வாயில் மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாக உள்ளது. மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உபரிநீர் கால்வாயில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பதால் மீன் வளம் அழிந்து வருவதாக மேட்டூர் அணை மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மீன்வளத்தை பாதுகாக்க மீன்வளத் துறையும் நீர்வளத் துறையும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முன்பு சிலேபி வகை மீன்கள் செத்து மிதந்தன . அப்போது ஆக்சிசன் பற்றாக்குறை காரணமாக இறந்திருக்கலாம் என்று கூறப்பட்டது. தற்போது அரஞ்சான் வகை மீன்கள் இலட்சக்கணத்தில் செத்து மிதப்பது கவலை அளிப்பதாக உள்ளது. மீன்வளத் துறையும் நீர்வளத் துறையும் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே மீன்வளத்தை பாதுகாக்க முடியும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.