
அதிமுகவை ஒன்றிணைக்கும் மூத்த நிர்வாகி செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அணைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை பத்து நாள்களுக்குள் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை ஏற்றால்தான் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தில் பங்கேற்பேன். அப்படி ஒருங்கிணைக்கப்படவில்லை என்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
இந்நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
அதிமுக மூத்த நிா்வாகி செங்கோட்டையனின் பேச்சு அதிமுகவின் உள்கட்சி விவகாரம். யாருடைய குரலாக யாரும் பேசவில்லை. எல்லோரும் தங்கள் சொந்த குரலில் தான் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்கள் அனைவரும் ஒன்றாக அமைச்சா்களாக இருந்தவா்கள். அவா்களது கருத்தை அவா்கள் பேசிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களுக்குள் பேசி முடித்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயமாக அகற்ற முடியும் என்றார்.
பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் வெளியேறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. தோ்தலுக்கு பல மாதங்கள் உள்ளன. கடைசி ஒரு மாதத்தில் கூட அதிகமான மாற்றங்கள் வரும். ஆட்சி மாற்றம் வரும். நிச்சயமாக நல்லது நடக்கும்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் கூறியிருப்பது நல்ல விஷயம். அதை வரவேற்கிறேன். அதிமுக இணைப்பு குறித்து எடப்பாடி கே.பழனிசாமி தான் பேச வேண்டும். தேவைப்பட்டால் நான் அவரோடு பேசுவேன். தொடக்கக் காலத்தில் இருந்தே அதிமுக இணைய வேண்டும் என சொல்லிக் கொண்டிருக்கிறேன். திமுகவை தவிா்த்து அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். அனைவரும் வரவேண்டும். வருவாா்கள் என்றாா்.
பாஜகவில் குடும்ப அரசியல் நிலவுவதாகவும், உங்கள் மகன் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு, பாஜகவில் குடும்ப அரசியல் இல்லை. அவரவர் அவர்களுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்.
மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தில்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காதது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து அவர் கட்சித் தலைமையிடம் முன்பே தெரிவித்துவிட்டார் என்று கூறினார்.
மேலும், பிரதமா் நரேந்திர மோடி இந்தியாவிற்கு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் தந்துள்ளாா்.
ஜிஎஸ்டி அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் நிா்ணயிக்கப்பட்ட 5 ,12 ,18, 28 சதவீத வரிகள் தற்போது மற்றப்பட்டுள்ளன. 90 சதவீத வரிகள் இப்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளன. இதில் பொது மக்களுக்கு மிகப்பெரிய லாபம் உள்ளது. வரி குறைப்பு காரணமாக பொருள்களை வாங்கும் திறன் கூடும். மக்களின் வரிச் சுமை குறைந்துள்ளது என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.