
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை திமுக அரசு நலத்திட்டங்களை வழங்குவதற்காக பள்ளிக்கு விடுமுறை அளித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை, திமுகவின் மக்கள் விரோதப் போக்குக்கு 2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள் என கூறியுள்ளார்.
திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை(செப்.9) விடுமுறை அளித்து, திமுக அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகள் கூட பலிகடா ஆக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே பரிதாப நிலையில் இருக்கிறது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே, சுமார் நூறுக்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு விடுமுறை அளித்து, திமுகவின் விளம்பர நிகழ்ச்சிகள் நடத்தும் அளவுக்கு, அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நடத்த, ஊரை அடித்து உலையில் போட்டிருக்கும் திமுகவினருக்குச் சொந்தமாக திருச்சியில் வேறு இடங்களா இல்லை? ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிதானே என்ற அலட்சியப் போக்கு.
திமுகவின் இந்த மக்கள் விரோதப் போக்குக்கு, வரும் "2026 தேர்தலில் தமிழக மக்கள் முடிவு கட்டுவார்கள்" .
மேலும், தமிழ்நாட்டில் 2026 இல் ஆட்சி மாற்றம் வரும். அதில் அமித் ஷா உறுதியாக இருக்கிறார். ஓ. பன்னீர்செல்வம் தனது முடிவை மறுபரிசீலனை செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது. தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. சிறிய பிரச்னைகளாக இருந்தாலும், அவை தீர்க்கப்படும் என்று அண்ணாமலை கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.