ஜிஎஸ்டி சீரமைப்பால் பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது: அமுல் நிர்வாகம் அறிவிப்பு

பாக்கெட் செய்யப்பட்ட பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமுல் நிர்வாகம் ...
அமுல் பால் - கோப்புப் படம்
அமுல் பால் - கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

புது தில்லி: செப்டம்பர் 22 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மாற்றங்கள் காரணமாக பாக்கெட் செய்யப்பட்ட பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமுல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் மிகவும் பிரபலமான பால் பிராண்டுகளில் ஒன்றான அமுல், ஏற்கனவே பாக்கெட் செய்யப்பட்ட பால் விற்பனையில் பூஜ்ஜிய சதவீத ஜிஎஸ்டி நடைமுறையில் இருந்து வருவதால் செப்டம்பர் 22 முதல் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் வகைகளில் எந்த விலை குறைப்பும் இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

புதிய ஜிஎஸ்டி விகிதங்களின்படி உற்பத்தியாளா்கள், ஏற்றுமதியாளா்கள் என அனைவரும் பொருள்கள் மீதான அதிகபட்ச விற்பனை விலையை (எம்ஆா்பி) மாற்ற (குறைக்க) அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது விற்பனையாகாமல் கைவசம் உள்ள பொருள்கள் மீது இந்த குறைக்கப்பட்ட விலை அச்சிடப்பட வேண்டும். அதுவும் ஜிஎஸ்டி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதனை வெளிக்காட்டும் வகையில் இருக்க வேண்டும்.

அதே நேரத்தில் அந்த பொருளின் முந்தைய விலை (குறைக்கப்படாத விலை) அழிக்காமல், அதன் அருகே புதிய (குறைக்கப்பட்ட) விலையை அச்சிட வேண்டும். மேலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலை எந்த அளவுக்கு குறைந்துள்ளது என்பதை விளம்பரங்கள் மற்றும் பொது அறிவிப்புகள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஜிஎஸ்டி சீரமைப்புக்குப் பிந்தைய விலை தொடா்பான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும், நுகா்வோா் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய உணவு, நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி கூறியிருந்தார்.

இந்நிலையில், செப்டம்பர் 22 முதல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மாற்றங்கள் காரணமாக பாக்கெட் செய்யப்பட்ட பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது என்று அமுல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமுல் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் ஜெயன் மேத்தா கூறுகையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் வகைகள் பூஜ்ஜிய சதவீத ஜிஎஸ்டி விகிதத்தில் விற்பனை செய்யப்படுவதால், புதிய ஜிஎஸ்டி விகிதங்களால் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் விலையில் எந்த மாற்றமும் இருக்காது ." என்றார்.

முன்னதாக, சில ஊடகங்களில் ஜிஎஸ்டி 2.0 கட்டமைப்பின் கீழ் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் விலையில் ரூ.3 முதல் ரூ.4 வரை குறைக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியானது.

இருப்பினும், ஏற்கனவே பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் வகைகளுக்கு பூஜ்ஜிய சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் வகைகளில் விலை குறைப்பு இருக்காது, அத்தகைய தகவல்கள் தவறானவை என்று மேத்தா தெளிவுபடுத்தினார்.

மேலும், புதிய வரி கட்டமைப்பின் கீழ் நீண்ட ஆயுள் கொண்ட அல்ட்ரா-உயர் வெப்பநிலை(யுஎச்டி) பாலுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் 5 சதவீதத்திலிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், அந்த வகை பால் விற்பனை விலைகளில் மாற்றம் இருக்கலாம் என்று மேத்தா கூறினார்

செப்டம்பர் 3 ஆம் தேதி, 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு விகிதங்களில் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அவை 5% மற்றும் 18% என இரு விகிதங்களாக சீரமைக்கப்பட்ட புதிய ஜிஎஸ்டி நடவடிக்கைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இது வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் என்று அழைத்தார். "அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தம்" என்று அழைக்கப்படும், இதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருள்கள் தொடங்கி வீட்டு உபயோகப் பொருள்கள், காா்கள் வரை விலை குறைப்பு, சுகாதாரத் துறைக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரி விகித குறைப்பால் 12% வரி விதிக்கப்பட்ட பல பொருள்களின் ஜிஎஸ்டி 5 சதவீதமாகக் குறைந்தது; மேலும் பல பொருள்கள் 28% இல் இருந்து 18% விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. 5% வரி விதிப்பு இருந்த பல பொருள்கள் முழுமையாக ஜிஎஸ்டி விலக்குப் பெற்றன.

Summary

There will be no impact on packaged milk prices because of Goods and Services Tax (GST) changes from September 22nd, says Amul.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com