
அரியலூா்: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தலைமையில் நிச்சயம் ஒரு கூட்டணி அமையும். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.
அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
முதல்வர வேட்பாளராக பழனிசாமி கூடாது
பாஜக கூட்டணியில் முதல்வா் வேட்பாளராக பழனிசாமி இருக்கும் போது நாங்கள் எப்படி கூட்டணியில் இருக்க முடியும். முதல்வர வேட்பாளராக பழனிசாமி இருக்கக்கூடாது என்பது தான் எங்களது கோரிக்கை. அதிலிருந்து மற்றவற்றை புரிந்து கொள்ளுங்கள்.
விஜய் பிரசாரத்தை நானும் தொலைக்காட்சியில் பாா்த்தேன். நிறைய இளைஞா்கள், இளம் பெண்கள், 40 வயதுக்கு உட்பட்டவா்கள் திரண்டு வந்திருந்தனா்.
ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை
முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பாணியில் விஜய் பேசவில்லை. நான் அதை அப்படி பாா்க்கவில்லை. இருந்தாலும் ஜெயலலிதா பாணியில் ஒருவா் பேசினால், அது மகிழ்ச்சியானது தான்.
பிரசாரத்தை ரத்து செய்து சரி
பெரம்பலூருக்கு விஜய் சென்றபோது நள்ளிரவு நேரமாகிவிட்டது. நள்ளிரவைத் தாண்டிய பிறகு பிரசாரத்தை ரத்து செய்துதான் ஆக வேண்டும்.
விஜய் தலைமையில் கூட்டணி
தமிழகத்தில் விஜய் தலைமையில் கூட்டணி உருவாகும் என நான் பலமுறை சொல்லி விட்டேன். அதில் அமமுக இணைவது குறித்து தற்போது சொல்ல முடியாது. விஜய் தலைமையில் ஒரு கூட்டணியும், சீமான் தலைமையில் ஒரு கூட்டணி நிச்சயம் அமையும். தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிச்சயம் உண்டு என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.