
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கான போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றின் கடைசிப் போட்டியில் இந்திய அணி, இலங்கையை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அசத்தியது. துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்கின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா, 309 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம், டி20 வடிவிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற புதிய சாதனையை நோக்கி அவர் நகர்ந்து வருகிறார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் பில் சால்ட் 331 ரன்கள் குவித்துள்ளதே, சர்வதேச டி20 தொடர் ஒன்றில் வீரர் ஒருவரால் குவிக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாக இருந்து வருகிறது.
ஆசிய கோப்பை தொடரில் 309* ரன்கள் குவித்து விளையாடி வரும் அபிஷேக் சர்மா, இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டின் சாதனையை முறியடிக்க இன்னும் 23 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. அதேபோல, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி 319 ரன்கள் குவித்திருந்தார். இதன் மூலம், சர்வதேச டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை கோலி தன்வசம் வைத்துள்ளார். இதனை முறியடிக்க, அபிஷேக் சர்மாவுக்கு இன்னும் 11 ரன்களே தேவைப்படுகின்றன.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 23 ரன்கள் எடுக்கும் பட்சத்தில், பில் சால்ட் மற்றும் விராட் கோலி இருவரின் சாதனையையும் முறியடித்து, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனைக்கு சொந்தக்காரராவார்.
சர்வதேச டி20 தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள்
பில் சால்ட் - 331 ரன்கள், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக, 2023 (5 இன்னிங்ஸ்களில்)
விராட் கோலி - 319 ரன்கள், 2014 டி20 உலகக் கோப்பை (6 இன்னிங்ஸ்களில்)
திலகரத்னே தில்ஷன் - 317 ரன்கள், 2009 டி20 உலகக் கோப்பை (7 இன்னிங்ஸ்களில்)
முகமது ரிஸ்வான் - 316 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2022 (6 இன்னிங்ஸ்களில்)
அபிஷேக் சர்மா - 309* ரன்கள், 2025 ஆசிய கோப்பை தொடர் (6 இன்னிங்ஸ்களில்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.