
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவை இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுப் போட்டிகள் நேற்றுடன் நிறைவடைந்தன. சூப்பர் 4 சுற்றில் துபையில் நேற்று (செப்டம்பர் 26) நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் விளையாடின. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் இந்திய அணி, இலங்கையை வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். நேற்றையப் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், நடப்பு ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர்ச்சியாக மூன்று அரைசதங்களைப் பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி நிர்வாகம் ஊக்குவிப்பதாகவும், அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதனை இந்திய அணி நிர்வாகம் ஊக்குவிக்கிறது. அவர் தொடர்ச்சியாக ரன்கள் குவிப்பதற்கு அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே ஆகும். ஆட்டத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அவரால் மெதுவாகவும் விளையாட முடிகிறது. அதனால், நாளுக்கு நாள் அவருடைய பேட்டிங்கில் சிறப்பான முன்னேற்றங்களை கண்டு வருகிறார்.
அபிஷேக் சர்மா அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணியின் பயிற்சியாளர்கள் முழு சுதந்திரத்தையும் அளித்துள்ளனர் என நினைக்கிறேன். அதன் காரணமாக, அவரால் மிகவும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க முடிகிறது என்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபையில் நாளை (செப்டம்பர் 28) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.