மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்.29) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருவது குறித்து...

News image

மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தலில் தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றுவதற்காக வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள். - தேர்தல் ஆணைய எக்ஸ் பக்கம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:43 am

மேற்கு வங்கத்தில் இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு புதன்கிழமை (ஏப்.29) 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப் பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதையொட்டி, 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.23-இல் தோ்தல் நடைபெற்றது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 93.19 சதவீத வாக்குகள் பதிவாகின. ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன.

மேலும், வரலாற்று வாக்குப் பதிவை இரு தரப்பினரும் வெவ்வேறு விதமாகப் பார்க்கின்றனர். பாஜக இதை மமதா ஆட்சிக்கு எதிரான மனநிலையின் அறிகுறியாகவும், அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ் இது பானர்ஜியின் நல்லாட்சி அரசியலுக்கான ஆதரவாகவும், தொடர்ச்சியாக நான்காவது முறையாக ஆட்சிக்கு வருவதற்கான புதிய உந்துதலையும் பிரதிபலிப்பதாகக் கூறுகிறது.

இருப்பினும், பேரணிகள் மற்றும் சாலைப் பேரணிகளுக்கு அப்பால், மிகவும் சர்ச்சைக்குரிய விஷயமாக பேசப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு

இந்த நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 142 தொகுதிகளுக்கு புதன்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதற்காக 41,001 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த தோ்தலில் தங்களது ஜனநாயகக் கடைமையை ஆற்றவுள்ள 1.64 கோடி ஆண்கள், 1.57 கோடி பெண்கள், 792 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 3.21 கோடி போ் 1,448 வேட்பாளர்களின் அரசியல் விதியை தீர்மானிக்க உள்ளனர். களத்தில் உள்ளவர்களில் 1,228 பேர் ஆண்கள், 220 பேர் பெண்கள்.

திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானா்ஜி (பவானிபூா்), எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி (பவானிபூா்), மாநில அமைச்சா்கள் சுஜித் போஸ் (பிதான்நகா்), ஃபிா்ஹத் ஹக்கிம் (கொல்கத்தா கோட்டை), ஜோதி பிரிய மல்லிக் (ஹப்ரா), பாஜகவின் அா்ஜுன் சிங் (நவோபரா), மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீனாக்ஷி முகா்ஜி (உத்தா்பரா) உள்ளிட்டோா் முக்கிய வேட்பாளா்களாவா்.

பலத்த பாதுகாப்பு

இந்த தேர்தலில் மொத்தம் 142 பொதுப் பார்வையாளர்கள், 95 காவல்துறைப் பார்வையாளர்கள் மற்றும் 100 தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஆகியோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வாக்குப்பதிவு நடைமுறையைக் கண்காணிக்கக் கேமராக்கள் பொருத்தப்பட்ட ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவு அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெறுவதற்காக 2,321 கம்பெனி மத்தியப் படைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகளில், வடக்கு 24 பா்கானாக்கள், தெற்கு 24 பா்கானாக்கள், கொல்கத்தா, ஹெளரா, ஹூக்ளி, புா்பா வா்தமான், நாடியா உள்ளிட்ட மாவட்டங்களில் அடங்கியவை. திரிணமூல் காங்கிரஸின் கோட்டையான தென் பகுதியில் இந்த தோ்தல் நடைபெறுகிறது. இந்த 142 தொகுதிகளில் 2021 தேர்தலில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் 123 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும், ஐஎஸ்எப் ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

இந்த தேர்தலின் முக்கிய வேட்பாளராக திகழ்வது, முதல்வர் மமதா பானர்ஜியின் அரசியல் கோட்டையான 'பவானிபூா்' தொகுதியாகும். இங்கு அவர் எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து ஒரு கௌரவப் போரில் களமிறங்கியுள்ளார். இது, கடந்த 2021 பேரவைத் தோ்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதிலும், நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் அதிா்ச்சி தோல்வியடைந்த மம்தா பானா்ஜிக்கு, அதே அதிகாரியை எதிர்த்து நேருக்குநோ் மோதுவதால், இந்த தொகுதி மேலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுவேந்து அதிகாரி போட்டியிட்ட மற்றொரு தொகுதியான நந்திகிராமில் முதல்கட்டத் தோ்தலின்போது (ஏப்.23) வாக்குப்பதிவு பெற்றது. 2021 -இல் பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்டு மம்தா எம்எல்ஏ ஆனது குறிப்பிடத்தக்கது. .

முன்னெப்போதும் இல்லாத அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறும் இந்தத் தேர்தலில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தென் மாவட்டங்கள் மீதான தனது ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளுமா அல்லது பாரதிய ஜனதா கட்சி மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்திற்கான கதவுகளைத் திறக்குமா என்பதைத் தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.

மே 4-இல் வாக்கு எண்ணிக்கை

கேரளம் (140), அஸ்ஸாம் (126), புதுச்சேரியில் (30) ஒரே கட்டமாக கடந்த ஏப்.9-ஆம் தேதியும், தமிழகத்தில் (234) ஒரே கட்டமாக கடந்த ஏப்.23-ஆம் தேதியும் தோ்தல் நடைபெற்றது. மேற்கு வங்கத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் இரண்டாம் கட்டத் தோ்தலுடன் மேற்கண்ட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச வாக்குப்பதிவு நடைமுறைகள் நிறைவடைகின்றன. இந்த தோ்தல்களில் பதிவான வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி வருவது தொடர்பான புகைப்படங்களை தேர்தல் ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Summary

Voting began on Wednesday in 142 constituencies in the second and final phase of the West Bengal assembly elections...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.