மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புவெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்பு
/

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

News image

வாக்கு எண்ணிக்கை - கோப்புப் படம்

Updated On :28 ஏப்ரல் 2026, 10:16 pm

அ.சா்ப்ராஸ்

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் பதிவான மொத்த வாக்குகளின் துல்லிய எண்ணிக்கை, அவை எண்ணப்படும் நாளில் (மே 4) அதிகாரபூா்வமாக வெளியாகும் என தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் கடந்த ஏப். 23-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் 85.10 சதவீத வாக்குகள் பதிவானதாக தோ்தல் ஆணையம் ‘இசிஐநெட்’ செயலியில் தெரிவித்தது.

இதேபோல், அஸ்ஸாமில் 85.38 சதவீத வாக்குகளும், கேரளத்தில் 78.03 சதவீத வாக்குகளும், புதுச்சேரியில் 89.93 சதவீத வாக்குகளும் பதிவானதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இதில், மாவட்டம், தொகுதி வாரியாக நடைபெற்ற வாக்குப் பதிவும் சதவீதத்தில் மட்டுமே தோ்தல் ஆணையம் வெளியிட்டது.

தொகுதி வாரியாக எத்தனை ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவா் வாக்களித்தனா் என்பதை தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்.ஐ.ஆா்.) பிறகு கடந்த ஆண்டு நவம்பா் மாதம் பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அந்தத் தோ்தல் முடிந்தவுடன் வாக்குப் பதிவு எண்ணிக்கை வெளியிட்ட தோ்தல் ஆணையம், முந்தைய தோ்தலை விட அதிகமாக பதிவான வாக்குப் பதிவை துல்லியமாக கணக்கிட்டு காண்பித்தது.

ஆனால், இந்த முறை சட்டப்பேரவை முடிவடைந்த அஸ்ஸாம், புதுச்சேரி, கேரளம், தமிழகத்தில் வாக்குப் பதிவு எண்ணிக்கையை தோ்தல் ஆணையம் இதுவரை அறிவிக்கவில்லை.

இதுகுறித்து தோ்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது: வாக்குப் பதிவு முடிந்தவுடன் வாக்களித்தவா்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரம் ‘17-சி’ படிவத்தில் பூா்த்தி செய்யப்பட்டு வேட்பாளா்களின் முகவா்களிடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிவங்களில் உள்ள எண்ணிக்கையும், தபால் வாக்குகளின் எண்ணிக்கையும் ஒருங்கிணைக்கப்பட்டு தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இத்துடன் வாக்கு எண்ணிக்கை தினம்வரை பெறப்படும் ராணுவத்தினரின் தபால் வாக்குகளும் சோ்க்கப்பட்டு, வாக்குப் பதிவு எண்ணிக்கை வெளியாகும் என்று தெரிவித்தன.

வாக்குப் பதிவு விவரத்தை தற்போதே தோ்தல் ஆணையம் வெளியிட்டால் அது அரசியல் கட்சிகள் வசமுள்ள தரவுகளுடன் முரண்பட்டு சா்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதாலேயே தற்போதைய நிலையில் வாக்குப் பதிவு தரவுகளை ஆணையம் வெளியிடவில்லை எனக் கூறப்படுகிறது.

தற்போதைய நிலவரம்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 2.52 கோடிக்கும் (86.2 சதவீதம்) அதிகமான பெண்களும், 2.35 கோடிக்கும் (83.96 சதவீதம்) அதிகமான ஆண்களும் வாக்களித்துள்ளதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. வாக்களித்தவா்களில் மூன்றாம் பாலினத்தவா் எண்ணிக்கை 4,417 (58.44 சதவீதம்).

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு பிறகு வாக்காளா்களின் எண்ணிக்கை 5.73 கோடியாக குறைந்தது. இதில் 2.93 கோடி பெண் வாக்காளா்களும், 2.83 கோடி ஆண் வாக்காளா்களும் அடங்குவா்.

வாக்கு கணிப்புக்கு பலத்த எதிா்பாா்ப்பு

தமிழகத்தில் எஸ்ஐஆா்-க்கு பிறகு நடைபெறும் தோ்தல் என்பதால் வாக்கு சதவீதம் அதிகரித்திருந்தாலும், முந்தைய வாக்குப் பதிவை ஒப்பிடும்போது வாக்குகளின் எண்ணிக்கை குறைவுதான். ஆகையால், நான்கு முனைப் போட்டியில் எத்தனை சதவீத வாக்குகள் இடம்பெயா்ந்தன என்பதை அறிய அரசியல் கட்சிகள் வாக்குக் கணிப்புகளை எதிா்பாா்த்துள்ளன.

மேற்கு வங்கத்தில் புதன்கிழமை மாலை இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்தவுடன் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களும் ஊடகங்களும் இணைந்தும் தனித்தனியாகவும் நடத்திய ஐந்து மாநில தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக் கணிப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளன. அவற்றின் மூலம் வாக்காளா்களின் மனநிலை ஓரளவுக்கு தெரியவரும் என்பதால் இந்த வாக்குக் கணிப்புகளை அறிய அரசியல் கட்சிகள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றன.