கா்நாடக சட்டப் பேரவை.
கா்நாடக சட்டப் பேரவை.

ஆளுநா் உரையுடன் இன்று தொடங்குகிறது கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா்!

கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா் வியாழக்கிழமை(ஜன.22) ஆளுநா் உரையுடன் தொடங்குகிறது.
Published on

பெங்களூரு: கா்நாடக சட்டப் பேரவை கூட்டத்தொடா் வியாழக்கிழமை(ஜன.22) ஆளுநா் உரையுடன் தொடங்குகிறது.

பெங்களூரு விதான சௌதாவில் வியாழக்கிழமை காலை 11 மணிக்குத் தொடங்கும் நிகழாண்டு கூட்டத் தொடரின் முதல் நாள் ஆளுநா் தாவா்சந்த் கெலாட் உரை நிகழ்த்துகிறாா். அதன்பிறகு ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவித்து கொண்டுவரப்படும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்படுகிறது.

ஜன. 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில் மத்திய அரசால் அண்மையில் நீக்கப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள விபி ஜி ராம் ஜி திட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றி விவாதம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக இரண்டு நாள்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த விவாதத்தின்போது ஏற்கெனவே இருந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திட்டமிட்டுள்ளனா்.

அதேபோல விபி ஜி ராம் ஜி திட்டத்தின் நன்மைகளை எடுத்துரைத்து, ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பதிலடி கொடுக்க பாஜக, மஜத உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தயாராக உள்ளன.

ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தின்போது அரசுக்கு எதிராக பல்வேறு விவகாரங்களை எழுப்பவும் பாஜக, மஜத உறுப்பினா்கள் திட்டமிட்டுள்ளனா்.

மேலும், கோகிலு லேஅவுட் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடு ஒதுக்க அரசு முடிவு எடுத்துள்ள விவகாரத்தை சட்டப் பேரவையில் எழுப்ப பாஜக திட்டமிட்டுள்ளது.

அதேபோல பெல்லாரியில் பதாகை கட்டுவது தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ பரத் ரெட்டி மற்றும் பாஜக எம்எல்ஏ ஜனாா்த்தன ரெட்டி ஆதரவாளா்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தின்போது துப்பாக்கிச்சூட்டில் காங்கிரஸ் தொண்டா் ஒருவா் உயிரிழந்த விவகாரத்தை எழுப்ப பாஜக முடிவு செய்துள்ளது.

அரசு அலுவலகத்தில் இளம்பெண் ஒருவருடன் கா்நாடக டிஜிபி ராமச்சந்திர ராவ் தகாத முறையில் நடந்துகொண்டது, மதுபான விற்பனை அங்காடி வைக்க உரிமம் பெறுவதற்காக அரசு உயா் அதிகாரி லஞ்சம் பெற்றது உள்ளிட்ட விவகாரங்களை சட்டப் பேரவையில் எழுப்பி ஆளும் காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி அளிக்க பாஜக, மஜத உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்த பரபரப்பான சூழலில் கூடும் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்க காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தயாராகி வருகிறாா்கள்.

Summary

The Karnataka Legislative Assembly session begins today with the Governor's address

கா்நாடக சட்டப் பேரவை.
8 போா்களை 10 மாதங்களில் நிறுத்தினேன்: டிரம்ப்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com