

இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த பிரபல தடகள வீரங்கனை பி.டி. உஷா, சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியா சார்பில் போட்டியிட்டு பதக்கங்களை வென்று சாதனை படைத்தவர். நாட்டின் தடகள அரசி என்று குறிப்பிடப்படுபவர். இவரது கணவர் சீனிவாசன் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்று கோழிக்கோடு மாவட்டம் திக்கோடியில் வசித்து வந்தார். சீனிவாசன் முன்னாள் கபடி வீரர்.
இந்த நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக பி.டி. உஷா தில்லி சென்றிருந்த நிலையில், திக்கோடியில் உள்ள வீட்டில் இருந்த சீனிவாசன் வெள்ளிக்கிழமை மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை வீட்டில் இருந்தோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அவரது உடல் அவரது வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து தில்லியில் உள்ள பி.டி. உஷாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கேரளம் விரைந்துள்ளார்.
பி.டி. உஷா-சீனிவாசன் இணையருக்கு மருத்துவரான உஜ்வல் விக்னேஷ் என்ற மகன் உள்ளார்.
சீனிவாசன் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான பி.டி. உஷாவின் கணவர் சீனிவாசன் மறைந்த செய்தியறிந்து வருத்தமுற்றேன்.
தங்களின் அன்புக்குரியவரை இழந்து தவிக்கும் பி.டி. உஷா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.