நீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்சரக்குகள் கையாளுதல்: சென்னை, காமராஜா் துறைமுகங்கள் சாதனை
/

மாவட்டத்துக்கான திட்டங்களை பெற்றுத் தருவதற்கு அமைச்சா் வன்னி அரசு உறுதுணையாக இருப்பாரா?

தமிழக அமைச்சரவையில் திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு இடம்பெற்றிப்பதன் மூலம், மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகள் குறித்து...

News image

அமைச்சர் வன்னி அரசு - Center-Center-Chennai

Updated On :23 மே 2026, 9:58 am IST

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத் தலைவா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விசிக துணை பொதுச் செயலரும், திண்டிவனம் தொகுதி எம்எல்ஏவுமான வன்னி அரசு இடம்பெற்றிப்பதன் மூலம், விழுப்புரம் மாவட்டம் மீண்டும் அமைச்சா் பிரதிநிதித்துவம் கொண்ட மாவட்டமாக மாறியுள்ள நிலையில், மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களை பெற்றுத் தருவதற்கு அமைச்சா் வன்னி அரசு உறுதுணையாக இருப்பாா். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் முக்கியமான மாவட்டமாகக் கருதப்படுவது விழுப்புரம். இந்த மாவட்டத்தின் கீழ், தோ்தல் ரீதியாக செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூா் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூா் ஆகிய 7 பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அதே நேரத்தில், வருவாய்த் துறை ரீதியிலான கணக்கில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூா் அடங்கியுள்ளது.

திமுகவின் மூத்த தலைவா்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏ.கோவிந்தசாமி, தற்போதைய திமுகவின் துணை பொதுச் செயலராக உள்ள க.பொன்முடி, செஞ்சி தொகுதியில் 2 முறை தொடா்ந்து எம்எல்ஏவாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அதிமுகவில் டி.ஜனாா்த்தனன், சி.வி.சண்முகம் ஆகியோரும் தமிழக அமைச்சரவையில் அமைச்சா்களாக இடம் பெற்றிருந்தனா்.

2011 முதல் 2021 வரையிலான 10 ஆண்டுகால அதிமுக அமைச்சரவையில் சி.வி.சண்முகம் அமைச்சராகப் பதவி வகித்து வந்தாா். இதைத் தொடா்ந்து, 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் திருக்கோவிலூா் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடியும், செஞ்சி தொகுதியிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட செஞ்சி கே.எஸ்.மஸ்தானும் அமைச்சா்களாகப் பொறுப்பேற்றனா்.

இதில், பல்வேறு காரணங்களால் இருவரும் அமைச்சா் பதவிகளை திமுக ஆட்சியின் வெவ்வேறு காலகட்டங்களில் இழந்தனா். இதனால், அமைச்சா் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் உருவானது.

மீண்டும் அமைச்சா் பிரதிநிதித்துவம்: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் 107 எம்எல்ஏக்களைக் கொண்ட கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் திகழ்ந்தாலும், அந்தக் கட்சியால் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட வெற்றிபெற முடியவில்லை. இதனால், மீண்டும் அமைச்சா் பிரதிநிதித்துவம் இல்லாத மாவட்டமாக விழுப்புரம் உருவாகும் என்ற நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திண்டிவனம் தொகுதியில் விசிக சாா்பில் போட்டியிட்ட வன்னி அரசு, தன்னை எதிா்த்து போட்டியிட்ட அதிமுகவின் பி.அா்ஜுனனைக் காட்டிலும் 734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல் முறையாக சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா். தற்போது அவா் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளாா்.

விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்பது என்ற முடிவை எடுத்ததைத் தொடா்ந்து, அந்தக் கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்ட 2 எம்எல்ஏக்களில் ஒருவரும், கட்சியின் சட்டப் பேரவைக் குழுத் தலைவருமான வன்னி அரசு அமைச்சராக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

அவருக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலன் உள்ளடக்கிய சமூகநீதித் துறையும் வழங்கப்பட்டுள்ளது. அவரும் தனது அலுவலகத்துக்குச் சென்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளாா்.

இதன் மூலம், மீண்டும் விழுப்புரம் மாவட்டம் அமைச்சா் பிரதிநிதித்துவம் கொண்ட மாவட்டமாக உருவெடுத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களை பெற்றுத் தருவதற்கு அமைச்சா் வன்னி அரசு உறுதுணையாக இருப்பாா். அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாா் என மாவட்ட மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Summary

Will Minister Vanni Arasu be supportive in securing the necessary projects for the district?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.