புது தில்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், மாநிலங்களவை உறுப்பினர் எம். தம்பிதுரை தலைமையிலான 'அரசு உறுதிமொழிகள் மீதான நாடாளுமன்ற நிலைக் குழு' வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற இணைப்பு விரிவாக்கக் கட்டடத்தில் கூடி விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த கூட்டத்தின் போது, கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறைச் செயலாளர், தேசியத் தேர்வு முகமையின் தலைமை இயக்குநர் மற்றும் மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ஆகியோரின் கருத்துகளை இந்த குழு கேட்டறியும் என தெரிகிறது.
மேலும், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறைச் செயலாளர், தேசிய மருத்துவ ஆணையத்தின் தலைவர் மற்றும் சிபிஐ இயக்குநர் ஆகியோருடனும் ஆலோசிக்க உள்ளது.
நீட்- யுஜி வினாத்தாள் 2026 வினாத்தாள் கசிவு மற்றும் பிசிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மறுமதிப்பீடு தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து வரும் நிலையில், இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
இதற்கிடையே, நீட்- யுஜி 2026 வினாத்தாள் கசிவு வழக்கில் மேலும் இருவரை மத்தியப் புலனாய்வுத் துறை புதன்கிழமை கைது செய்தது; இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளதாக சிபிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாகக் கைது செய்யப்பட்டவர்களில், லாத்தூரைச் சேர்ந்த ஒரு மருத்துவர் மற்றும் புணேயைச் சேர்ந்த ஒரு பயிற்சி மையத்தின் ஆசிரியர் ஆகியோர் அடங்குவர்.
தொடர்ந்து நடைபெற்று வரும் விசாரணை குறித்த விவரங்களை வழங்கிய சிபிஐ, "இந்த வழக்கில் தொடர்புடைய நபர்களின் சங்கிலித்தொடர் தொடர்புகளையும், பின்னணியில் உள்ள சதியையும் வெளிக்கொணரும் நோக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிபிஐ இதுவரை 49 இடங்களில் சோதனைகளை நடத்தியுள்ளதுடன், குற்றத்தை உறுதிப்படுத்தும் வகையிலான பல ஆவணங்கள், மடிக்கணினிகள் மற்றும் அலைபேசிகளைப் பறிமுதல் செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் விரிவான பகுப்பாய்வுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன," என்று தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையிடமிருந்து பெறப்பட்ட முறையான புகாரைத் தொடர்ந்து, மே 12 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு, சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு; நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன; மேலும் சந்தேகத்துக்குரிய பலரை பிடித்து விசாரித்தனர்.
நிகழாண்டுக்கான நீட்-யுஜி தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வை நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.
இந்த தோ்வின் மாதிரி வினாத் தாள் ராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், என்டிஏ அதை ரத்து செய்தது. அதன்பிறகு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
Summary
The meeting assumes significance amid the ongoing controversy over the alleged NEET-UG 2026 paper leak and the CBSE Class 12 reevaluation issue.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏ-க்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்!

மத்திய கல்வி அமைச்சா் ராஜிநாமா செய்ய வேண்டும்: நீட் வினாத்தாள் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! ராஜஸ்தான் பாஜக நிர்வாகி கைது!







